கவிஞர் வாலி பிரபாகரன் பற்றி எழுதிய கவிதை!

மாமனிதனின் மாதாவே! – நீ 
மணமுடித்தது வேலுப்பிள்ளை;
மடி சுமந்தது நாலு பிள்ளை!
நாலில் ஒன்று –
உன் சூலில் நின்று –
அன்றே தமிழ் ஈழம் தமிழ் ஈழம் என்றது உன் –
பன்னீர்க் குடம் உடைத்துவந்த பிள்ளை –
ஈழத்தமிழரின் கண்ணீர்க் குடம்
 உடைத்துக் காட்டுவேன் என்று… 
சூளுரைத்து –சின்னஞ்சிறு தோளுயர்த்தி 
நின்றது நீல இரவில் –
அது நிலாச் சோறு தின்னாமல் –
உன் இடுப்பில் உட்கார்ந்து உச்சி வெயிலில் –
சூடும் சொரணையும் வர சூரியச் சோறு தின்றது; 
அம்மா!
அதற்கு நீயும் அம்புலியைக் காட்டாமல் 
வெம்புலியைக் காட்டினாய் அதற்கு,
தினச் சோறு கூடவே 
இனச் சோறும் ஊட்டினாய் நாட்பட –
நாட்பட – உன் கடைக்குட்டி 
புலியானது காடையர்க்கு கிலியானது!
சோழத் தமிழர்களாம் ஈழத் தமிழர்களை.
ஓர் அடிமைக்கு ஒப்பாக்கி 
அவர்களது உழைப்பைத் தம் உணவுக்கு உப்பாக்கி செம்பொன்னாய் இருந்தோரை
செப்பாக்கி அவர்கள் வாழ்வை 
வெட்டவெளியினில் நிறுத்தி 
வெப்பாக்கி மான உணர்வுகளை 
மப்பாக்கி தரும நெறிகளைத் தப்பாக்கி…
வைத்த காடையரை வீழ்த்த தாயே 
உன் தனயன் தானே – தந்தான் துப்பாக்கி! 
இருக்கிறானா? இல்லையா? எனும் 
அய்யத்தை எழுப்புவது இருவர்…???ஒன்று -???
பரம்பொருள் ஆன பராபரன் 
இன்னொன்று ஈழத்தமிழர்க்கு – அரும்பொருள் ஆன
 பிரபாகரன்…!
-கவிஞர்-வாலி-
(asrilanka)
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad