மூன்றாம் உலக யுத்தம் விரைவில்....

அமெரிக்காவின் உலக ஒழுங்கில் இன்று அரசியல் முக்கியத்துவம் மிக்க இரண்டு வெவ்வேறு சிந்தனைப் போக்கு கொண்ட நாடுகளைக் காணலாம்.

அதில் சீனா மற்றும் ரஷ்யாவின் அதிகரிக்கும் ஈடுபாடும், செயற்பாட்டுவாதமும் ஒருவகை.

1945ம் ஆண்டு முதல் சர்வதேசப் பரப்பில் தன்னாதிக்கம் செலுத்தி இப்போது தனது ஜனநாயக நாடுகளின் நம்பிக்கை, தகுதி, விருப்பம் என்பனவற்றில் வீழ்ச்சி கண்டு வரும் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இரண்டாவது வகை.

சீனாவும், ரஷ்யாவும் ஒன்றை ஒன்று நெருங்கி வர, இப்போது உள்ள உலக ஒழுங்கை மாற்றுவதில் அந்நாடுகளின் விருப்பமும், தகுதியும் அமெரிக்காவினதும் அதன் நேச நாடுகளினதும் விருப்பத்தையும், தகுதியையும் சந்திக்க, அமெரிக்காவின் உலக ஒழுங்கு சீர்குலைந்து மூன்றாவது உலக யுத்தத்துக்குள் நாம் வீழ்ந்துவிடும் நேரம் வரும்.

உயிர்கள், சொத்துக்கள், சுதந்திரம், நம்பிக்கை என்பவற்றிலான அந்த அழிவின் விலையைக் கணக்கிட முடியாது.

தனது சர்வதேச ஒழுங்கில் அடிப்படை ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதில் அமெரிக்கா கொண்டுள்ள பொறுப்பு குறித்து ஆதங்கம் வெளிப்படுத்தப்படும் நேரத்திலும் அமெரிக்கா அதையிட்டு அலட்டிக்கொள்ளாமல் இருப்பது போலவே தெரிகிறது.

உலக ஒழுங்குகள் என்றோ ஒருநாள் சீர்குலையும் என்றுதான் சரித்திரம் கூறுகிறது. இருப்பினும், அந்த சீர்குலைவு எதிர்பாராத, வேகமான, அராஜக நிகழ்வுகளாகவே இருக்கும்.

20 ஆம் நூற்றாண்டின் முதல் பத்து வருடங்களில் தொடர்புத்துறை மற்றும் போக்குவரத்து வசதிகளில் ஏற்பட்ட புரட்சி மக்களையும், பொருளாதாரத்தையும் ஒன்றிணைத்ததால் அதிகாரப் போட்டிக்கு முற்றுப்புள்ளி இடப்படும் என்றே அறிஞர்கள் எதிர்வு கூறினர்.

அடுத்த நான்கு வருடங்களில் உலகின் சரித்திரத்திலேயே பெரும் நாசம் விளைவித்த யுத்தம் மூண்டது.

1920 களுக்குப் பின்னிருந்த அமைதி 1930 களில் நெருக்கடியாக மாறி மற்றுமோர் உலக யுத்தம் ஏற்பட்டது.

நீண்ட சரித்திரம் கொண்ட இந்த சூழ்நிலையில் இன்று நாம் எங்கே இருக்கிறோம் என்பதை எப்போதும் போலவே, இப்போதும் அறிந்து கொள்வது அசாத்தியமாகவே உள்ளது.

இருப்பினும், அந்த வழித்தடத்தில் நாம் எங்கேயோ ஒரு இடத்தில் இருக்கிறோம் என்றால் அது தவறானதாக இருக்காது.

இந்த சூழ்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக் காலம் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என இப்போது கூற முடியாவிட்டாலும் அவருடைய நிர்வாகம் மற்றுமொரு யுத்தத்தை நோக்கியதான நகர்வுகளைக் குறைப்பதையோ, பின் தள்ளுவதையோ விட அந்த ஆபத்துக்குள் உலகை வேகமாகக் கொண்டு சென்றுவிடும் என்பதைத்தான் நடக்கும் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

ரஷ்யாவுடனான அமெரிக்காவின் விட்டுக் கொடுப்பு விளாடிமிர் புட்டினுக்கு உற்சாகம் தரும்.

அத்துடன், சீனாவுடன் கடுந் தொனியிலான பேச்சு ட்ரம்ப் நிர்வாகத்தின் மன உறுதியை பெய்ஜிங் இராணுவ வழியில் பரீட்சித்து பார்க்கவே இட்டுச் செல்லும்.

ஜனாதிபதி ட்ரம்ப் அப்படிப்பட்ட மோதலுக்கு தயாராக இருக்கிறாரா என்பது தெளிவில்லை.

இப்போதைக்கு தனது கடும் வார்த்தைப் பிரயோகம், செயல்களின் விளைவுகள் பற்றி அவர் சிந்திப்பதாகவும் தெரியவில்லை.

சீனாவும் ரஷ்யாவும் நீண்ட காலமாகவே அரசியல் மாற்று சக்திகளாக இருக்கின்றன.

ரஷ்யா தனது பாரம்பரிய மேற்கு நாட்டு எதிரிகளிடமிருந்தும், சீனா கீழைத்தேச எதிரியிடமிருந்தும் இன்று பாதுகாப்பாக இருப்பதுபோல முன்னெப்போதும் அப்படி உணர்ந்ததில்லை என்றாலும் இப்போதைய உலக அதிகார கட்டமைப்பில் அவை அதிருப்தி கொண்டிருக்கின்றன.

முன்புபோல தத்தமது பிராந்தியங்களில் அவை இப்போது ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றன.

சீனாவின் விடயத்தில் அது கிழக்கு ஆசியாவிலுள்ள நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்துவதாகும்.

ஜப்பான், தென் கொரியா அடங்கலான அந்த நாடுகள் பெய்ஜிங்கின் தந்திரோபாய, பொருளாதார, அரசியல் முன்னுரிமை விடயங்களில் எதிர்ப்பின்றி இணங்குகின்றன.

இதனால் அமெரிக்காவின் செல்வாக்கு ஹவாய் தீவுகளுக்குப் பின்னாலுள்ள கிழக்கு பசுபிக்கை நோக்கி பின்தள்ளப்படுவதையும் அது காட்டுகிறது.

ரஷ்யாவைப் பொறுத்தவரை, அது ஒரு காலத்தில் தனது சாம்ராஜ்யத்தின் பகுதியாகவோ, செல்வாக்குப் பரப்பின் பகுதியாகவோ கருதிய மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் தன்னாதிக்கம் செலுத்துவதாகும்.

அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கில் நியாயமற்ற அதிகாரம், செல்வாக்கு, கௌரவம் என்பன பகிர்ந்தளிக்கப்படுவதில் உள்ள தமது குறைகளை நிவர்த்தி செய்ய பெய்ஜிங்கும், மொஸ்கோவும் இப்போது முயல்கின்றன.

ஏகாதிபத்திய நாடுகள் என்ற வகையிலான இந்த நாடுகள் சர்வதேச அமைப்பிலுள்ள ஜனநாயக நாடுகளாலும், எல்லைகளிலுள்ள ஜனநாயக நாடுகளாலும் ஆட்கொள்ளப்படும் ஆபத்தில் இருப்பதாக உணர்கின்றன.

இவை அமெரிக்கா தமது அபிலாஷைகளுக்குப் பெரும் தடையாக இருப்பதாகக் கருதுவதால் தமது உரிமையுள்ள இலக்குகளை அடைவதில் தடையாக உள்ள அமெரிக்காவின் சர்வதேச பாதுகாப்பு ஒழுங்கை பலவீனமடையச் செய்ய வேண்டுமென நினைக்கின்றன.

அண்மைக் காலம்வரை ரஷ்யாவும், சீனாவும் தமது இலக்குகளை அடைவதில் பெரும் தடைகளைச் சந்தித்திருக்கின்றன.

பிரதான தடையாக இருப்பது சர்வதேச ஒழுங்கும் அதை ஆதரித்து காப்பாற்றும் பாதுகாவலனுமே.

மேலும், சோவியத்தின் பொதுவுடைமை சித்தாந்தம் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து வந்த இரு தசாப்தங்களில் ஜனநாயக அரசாங்கங்களின் வளர்ச்சியும், செழுமையும் பெய்ஜிங் மற்றும் மொஸ்கோவின் அதிகார ஆட்டத்துக்கு தொடர்ச்சியான அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றன.

அத்துடன் தண்போர் முடிவுக்கு வந்தது முதல் தமது எல்லைகளுக்கு அருகிலுள்ள தாராளமய ஜனநாயக நாடுகளின் ஒவ்வொரு முன்நகர்வையும் ஒரு அச்சுறுத்தலாகவே அவை கருதுகின்றன.

எனவே, அமெரிக்க ஆதரவிலான ஜனநாயக நாடுகளின் இந்த தொடர்ச்சியான அச்சுறுத்தல் சீனாவையும், ரஷ்யாவையும் இயற்கையாக அந்த ஒழுங்குக்கும், அமெரிக்காவுக்கும் எதிராக திருப்பி விட்டுள்ளது.

ஆனால், அண்மைக் காலம் வரை உள்நாட்டு, சர்வதேச சக்திகளின் செல்வாக்கும் அந்த ஒழுங்கை நேரடியாக எதிர்கொள்ள முடியாதபடி சீனாவையும், ரஷ்யாவையும் தடுத்திருக்கிறது.

அமெரிக்காவுடனான நேரடி மோதல் தோல்வியடைந்தால் உள்நாட்டில் தமது ஆட்சி உரிமைக்கு என்ன நடக்கும் என சீனத் தலைவர்கள் கவலைப்படுகின்றனர்.

புட்டினும் அமெரிக்காவினதும், ஐரோப்பிய நாடுகளினதும் சிறிதளவான எதிர்ப்பைக் கூட எதிர்கொள்வதில் அதிக எச்சரிக்கையுடனேயே இருந்து வருகிறார்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad