புதையுண்ட நகரம் கீழடியும் தொடரும் அகழாய்வுப் பணிகளும்

இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் அகழாய்வு செய்யப்பட்டு வரும் சங்க கால வசிப்பிடமானக் கீழடித் தொல்லியல் களம் பற்றிய கட்டுரையே இது. தமிழ்நாட்டில் மதுரைக்குத் தென்கிழக்கில் 12 கி.மீ தொலைவில், சிவகங்கை மாவட்டத்தில் கீழடி என்ற ஊருக்கு அருகில் இந்த அகழாய்வு மையம் அமைந்துள்ளது. ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு அடுத்து இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழாய்வு இது.

இதையடுத்து கீழடியில் கண்டெடுக்கப்பட்ட இர‌ண்டு கார்பன்‌ மாதிரிகளின் காலத்தைக் கண்டறிய அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள ‘பீட்டா அனலடிக்‘ என்ற நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அவை அனுப்பிவைக்கப்பட்டன. அந்தப் பரிசோதனையின் முடிவுகளை மத்திய கலாசாரத்துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா  வெளியிட்டார். அதில் “கீழடி அகழ்வாராய்ச்சி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருள் 2,160 ஆண்டுகளுக்கும், மற்றொரு பொருள் 2,220 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை. கரிம பகுப்பாய்வு சோதனையில் கீழடி நகர நாகரிகம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பது உறுதிபடுத்தப்பட்டது” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

காவிரிப் பூம்பட்டினம் அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு மத்திய தொல்லியல் துறை தமிழகத்தின் கீழடியில்தான் ஆய்வு நடத்தி இருக்கிறது. கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் மேடானது, கிட்டத்தட்ட 110 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. கி.பி. 300-ம் ஆண்டு தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையிலான தடயங்கள் கிடைத்தன. ஆனால், கீழடியில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. கீழடியில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் எனப் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதையடுத்து, அங்கு அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டிருந்த தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத், அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, துணை கண்காணிப்பாளராக இருந்த ஸ்ரீராம் பணியில் அமர்த்தப்பட்டார். அதன்பிறகு மத்திய தொல்லியல்துறை அகழ்வாராய்ச்சிக்கு அனுமதியளித்தது. தற்போது, கீழடியில் பெயரளவிற்கு மட்டுமே ஆராய்ச்சி நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் சுமார் 2200 வருடங்கள் பழமையானவை நிரூபணமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கீழடியில் கிடைக்கும் ஆய்வு முடிவுகள் தமிழகத்தின் வரலாற்றை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. தமிழகத்தில் கல்வெட்டுகள்,  புலவர் பாடல்கள் ஆகியவை உண்டு. ஆனால் நம்மிடம் வரலாற்று சாட்சியங்கள் இல்லை. தற்போது அவை கீழடியில் கிடைத்துள்ளன.

கீழடியில் அக்கால மக்களின் வாழ்க்கை முறை மற்றும் தொழிற் கூடங்கள் செயல்பட்டதற்கான சாட்சியங்கள் கிடைத்துள்ளன. அங்கே ஆய்வு நடத்தினால் வைகை ஆறு தடம் மாறிய தகவல்கள் கிடைக்கலாம். பழங்கால சமூகமாக இருந்தாலும் கீழடியில் வாழ்ந்த மக்கள் நாகரிக சமூகமாக இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. கீழடியில் ஆய்வை தொடரும்போது கூடுதல் தகவல்கள் கிடைக்கும். அங்கே கிடைத்துள்ள பொருட்களைக் கொண்டு அருங்காட்சியகமாக அமைப்பதற்கு தேவையான இடத்தை மாநில அரசு வழங்க வேண்டும் என்று அப்போதைய செய்தியாளர்கள் பேட்டியில் கூறினார் அமைச்சர் என்.டி.கே.ரங்கராஜன்.

இதுகுறித்து,  மத்திய தொல்லியல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “கீழடியில் இரண்டு சதவிகிதம் மட்டுமே அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது. இரண்டு வருடங்கள் ஆராய்ச்சி நடத்தியதற்கே 5,300 தொன்மையான பொருள்கள் கிடைத்திருக்கின்றன என்றால், இன்னும் பத்து முதல் இருபது வருடங்கள்வரை ஆராய்ச்சி நடத்தினால் என்னவெல்லாம் கிடைக்கும் என்பதை எண்ணிப்பார்க்க முடிகிறது. இன்னும் பல வருடங்கள் ஆராய்ச்சி நடத்தினால்தான் கீழடியின் உண்மையான காலத்தையும், அங்குவாழ்ந்த மக்களின் நாகரிகத்தையும் முழுமையாகக் கண்டறிய முடியும். இப்போது பரிசோதனையில் இருந்து கிடைத்திருக்கும் தகவல், மதுரைக்கு அருகே ‘சங்ககால நகரம்’  ஒன்று இருந்ததற்கான ஆதாரம் மட்டுமே. கீழடியில் முழுமையாக ஆறு மீட்டர் ஆழத்திற்கு அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும். அப்போதுதான், இந்த நகரம் எப்படித் தோன்றியது என்பதை கண்டுபிடிக்க முடியும்” என்றார்.

வைகையாறு தோன்றும் தேனி மாவட்டம் தொடங்கி கடலில் கலக்கும் இராமநாதபுரம் மாவட்டம் வரை வைகை ஆற்றங்கரையின் அருகமை பகுதிகளில் 2013-14இல் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின்போது தொல்லியல் எச்சங்கள் உள்ள 293 பகுதிகள் கண்டறியப்பட்டன. இவை களஞ்சியங்கள், வணிகத் தலங்கள், துறைமுகங்கள், வாழிடங்கள், கோயில்கள் என்ற வகையிலானவை. வருசநாட்டிலும், அழகங்குளத்திலும் சிறிய அளவிலான அகழாய்வுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் பெரிய அளவிலான அகழாய்வுகள் இதுவரை நடந்திருக்கவில்லை.

கிட்டத்தட்ட 48 சதுரக் குழிகள் வெட்டப்பட்டு உறைகிணறுகள், செங்கற் சுவர்கள், கூரை ஓடுகள், மண்பாண்டங்கள், மிளிர்கல் அணிகலன்கள், எலும்புக் கருவிகள், இரும்பு வேல், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடுகள் எனப் பல்வேறு தொல்லெச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இலக்கியத்தில் குறிப்பிடப்படும் பாண்டியர்களின் தொல்நகரான “பெருமணலூர்” இதுவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கீழடியில் 10 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஒரு வளர்ச்சியடைந்த நகரமாக இது திகழ்ந்ததற்கு இது வலுவான சான்றாக உள்ளது. சங்க காலத்தில் கட்டிடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழ்வாய்வு மாற்றியமைத்துள்ளது. நீர் வழங்கலும், கழிவுநீர் அகற்றலும் நாகரிக வளர்ச்சியின் முக்கிய மைல்கல்களாகக் கருதப்படுவன. கீழடியில் சுடுமண் குழாய் மூலம் உருவாக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் வசதியுடன் கட்டிடங்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளன. இங்கு பழங்கால சுடுமண் உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை பட்டினப்பாலை கூறும் உறைகிணற்றுப் புறச்சேரி’ என்ற தொடருக்குச் சான்று பகிர்கின்றதாகவும், ஆற்றங்கரைகளிலும், பெரிய குளக்கரைகளிலும் இவ்வாறு உறைகிணறுகள் அமைத்து நீரெடுக்கும் தமிழரின் பண்டைய வழக்கத்தை எடுத்துக்காட்டுவனவாகவும் உள்ளதாகத் தொல்லியல் அறிஞர் வெ.வேதாச்சலம் குறிப்பிடுகிறார். வரலாற்றின் தொடக்க காலத்திய செங்கல் கட்டிடச் சான்றுகள் கிடைப்பது மிகவும் அரிதாகக் கருதப்படும் நிலையில் இங்கு பெருமளவில் செங்கல் கட்டிடங்கள் உள்ளது ஆய்வாளர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

ரோமப் பேரரசுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பை மெய்ப்பிக்கும்படியான, வணிகர்களால் கொண்டுவரப்பட்ட ரௌலட் (rouletted), அரிட்டைன் (arretine) வகை மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன. அழகங்குளத்திலும் இத்தகைய பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் வரலாற்றின் தொடக்ககாலத்தைச் சேர்ந்தவையான கருப்பு, சிவப்பு மண்பாண்டத் துண்டுகள், வெள்ளை வண்ணம் பூசப்பட்ட கருப்பு, சிவப்பு மண்பாண்டத் துண்டுகள், செம்பழுப்பு நிற கலவை பூசப்பட்ட மண்பாண்டத் துண்டுகள் ஆகியவையும் கிடைத்துள்ளன. தமிழகத்தில் செம்பழுப்பு நிற ரசட் (russet) கலவை பூசப்பட்ட பாண்டங்கள் இதுவரை கொங்குப் பகுதியிலேயே கிடைத்திருப்பதைக் கொண்டு இப்பகுதி கொங்குப் பகுதியுடனும் வாணிபத் தொடர்பிலிருந்ததாகக் கருதப்படுகிறது.

‘ஆதன்’, ‘உதிரன்’, ‘திசன்’ போன்ற தனிநபர்களின் பெயர்களைக் குறிப்பிடும் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இங்கு சூது பவளம், பளிங்கு, அகேட் மணிகள், பச்சை, மஞ்சள், நீல நிறக் கண்ணாடி மணிகள் ஆகியவையும் கிடைத்துள்ளன. யானைத் தந்தத்தினாலான தாயக்கட்டைகள், தாமிரத்தாலான கண் மை தீட்டும் கம்பி ஆகியவையும் கிடைத்துள்ளன. இரும்பாலான அம்பு முனைகள், எழுத்தாணி, சுடுமண் முத்திரை கட்டைகள், தந்தத்தால் ஆன தாயக் கட்டைகள், சுடுமண் பொம்மைகள் உட்பட்ட பல்வேறு அரிய தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.

முதல் கட்ட கீழடி அகழ்வாராய்ச்சி கீழடியில் ஜூன், 2015 ஆம் ஆண்டு வைகை ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகளில், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கண்காணிப்பாளர் கி. அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு தொடங்கியது. இரண்டாம் கட்ட கீழடி அகழ்வாராய்ச்சி  2016 ஆம் ஆண்டு  ஜனவரி 2ந்தேதி அன்று அகழாய்வு தொடங்கியது. இதில் மருத்துவ குடுவைகள்,  பழங்கால உறை கிணறுகள், தொழிற்சாலை, அரசு முத்திரை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கிடைத்தன.

இரண்டாம் கட்ட அகழாய்வின் முடிவில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்தன. இவற்றை ஆய்வுக்கு உட்படுத்தியபோது 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தைச் சேர்ந்தவை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட அகழாய்வு சனவரி, 2017 முதல் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் தலைமையில் நடைபெறுகிறது. இப்பணி 30 செப்டம்பர் 2017ல் முடிகிறது. மூன்றாம் கட்டப் பணியில் 400 சதுர மீட்டர் அளவுக்கு 16 குழிகள் தோண்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad