திருகோணமலை - அத்தாபெந்திவெவ பகுதியில் சேனை காட்டில் காணாமல்போன சிறுவன் நான்கு மணித்தியாலத்திற்குப் பின்னர் காட்டுப்பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (29) காலை இடம்பெற்றுள்ளது.
அத்தாபெந்திவெவ பகுதியில் உள்ள பழைய சேனை காட்டிற்குள் வட்டுக்காய் ஆய்வதற்காகச் சிறுவனின் தாய் மற்றும் அம்மம்மாவுடன் சென்றபோது சிறுவனைச் சைக்கிள் அருகில் நிறுத்திவிட்டு தாயும் அவரது அம்மம்மாவும் வட்டுக்காய் பறித்துள்ளனர்.
இதேவேளை 3 வயது சிறுவன் பாழடைந்த வழி ஊடாக தாயாருக்கும் அம்மம்மாவுக்குத் தெரியாமல் இவர்களைத் தேடிச் சென்றுள்ளார்.தாயும், அம்மம்மாவும் சிறுவனை நிறுத்திய இடத்தில் வந்து பார்த்தபோது சிறுவன் அவ்விடத்தில் இருக்கவில்லை எனவும், சிறுவனைக் குறித்த இடத்தை சுற்றிப் பார்த்த போது சிறுவன் இருக்கவில்லை எனவும், அதனை அடுத்து கிராம மக்களுக்குத் தெரியப்படுத்தியதுடன், பொலிஸார் இராணுவத்தினர் மற்றும் சிவில் பாதுகாப்புப் படை உத்தியோகத்தர்கள் இணைந்து காட்டுப்பகுதியில் தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் சிறுவனை நிறுத்திய இடத்திலிருந்து 3 கிலோமீட்டருக்கும் அப்பால் உள்ள காட்டுப்பகுதியில் நான்கு மணித்தியாலத்திற்குப் பின்னர் சிறுவன் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு காணாமல்போன சிறுவன் செனவிரத்னகே சாஜித் சுரங்க செனவிரத்ன,ஹன்சிகா மதுவந்தி ஆகியோரின் மகன் தினூஜ பெஹசர (03வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சிறுவனை மீட்டுத் தந்த பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படை உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவத்தினருக்கு தமது நன்றிகளையும் சக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.