மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை காதலனை தனியாக அழைத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் மண்டலம், பெங்கரகுந்தா கிராமத்தை சேர்ந்தவர் சைலஜா. இவரும், அதே கிராமத்தை சேர்ந்த டிரைவர் தனசேகர் என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த விஷயம் சைலஜாவின் பெற்றோருக்கு தெரிந்தது வந்துள்ளது. இதனால் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
ஆனால், அதையும் மீறி இவர்களின் காதல் தொடர்ந்ததால், சைலஜாவின் தந்தை பாபு கடந்த 22ம் தேதி இரவு தனசேகருக்கு போன் செய்து, உன்னிடம் தனியாக பேச வேண்டும். என்னுடைய விவசாய நிலம் அருகே வா என்று அழைத்துள்ளார்.
உடனே அவரும் எதை பற்றியும் சிந்திக்காமல் செல்ல, அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இரவு முழுவதும் மகன் வரவில்லை எங்காயவது நண்பர்கள் வீட்டிற்கு சென்று இருக்கலாம் என பெற்றோர்கள் நினைத்தனர்.
ஆனால், மறு நாளும் வராததால், 24ம் தேதி காலை பலமனேர் காவல் நிலையத்தில் தனசேகரின் பெற்றோர் புகார் அளித்தனர். விசாரணையில் சைலஜாவின் தந்தை பாபு, தனது சொந்த விவசாய நிலத்தில் கொடூரமாக தனசேகரை கொலை செய்து, பின்னர் உடல் பாகங்களை தனித்தனியாக வெட்டி புதைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், பாபுவை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரித்தனர். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, தனசேகரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.