15 சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், குற்றவாளியை சாகும்வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது நீதிமன்றம்.
தூத்துக்குடி மாவட்டம் முக்காணி பகுதியை சேர்ந்தவர் மாசாணமுத்து. இவர் அங்குள்ள சுடலை மாடன் கோவில் பூசாரியாக இருந்துள்ளார். இந்நிலையில் அந்த கோவிலுக்கு வந்த 35 வயது பெண் ஒருவர், பூசாரி மாசானமுத்துவிடம் தனது குடும்ப கஷ்டங்களை கூறி, அதற்கு பரிகாரம் கேட்டுள்ளார்.
ராமேஸ்வரத்தில் உள்ள கோவிலில் பரிகார பூஜை செய்தால் உன் கஷ்டமெல்லாம் நீங்கிவிடும் என மாசானமுத்து கூற, கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி, தனது 15 வயது மகள் மற்றும் பூசாரியை அழைத்துக்கொண்டு அந்த பெண் ராமேஸ்வரத்துக்கு சென்றுள்ளார்.
ராமேஸ்வரம் சென்ற அவர்கள், ஒரு விடுதியில் தங்கியிருந்தநிலையில், 15 வயது சிறுமியை தனியறையில் வைத்து, பூஜை செய்வதாக கூறி அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் பூசாரி மாசானமுத்து. இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், இதுகுறித்து ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரை அடுத்து மாசனமுத்துவை போக்சோ சட்ட பிரிவின்கீழ் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பளித்த ராமநாதபுரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சுபத்ரா, பூசாரி மாசாணமுத்துவை சாகும்வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டு, ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.