கணவரை வேவு பார்த்த வடமாகாண பெண் வைத்தியருக்கு கணவரின் பொருட்களை தொட தடைவிதித்து நீதிமன்றம் அதிரடி உத்தவை பிறப்பித்துள்ளது. கணவர் கல்கிசை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிறப்பு வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி குறித்த பெண் வைத்திய நிபுணர் ஒருவர் தனது கணவரின் கணினியை சட்டத்துக்குப் புறம்பாகப் பயன்படுத்துவதற்கும் அதிலுள்ள தகவல்களைப் பதிவிறக்குவதற்கும் மற்றும் அவரது உடமையில் கண்காணிப்பு சாதனத்தை பொருத்துவதற்கும் தடைவிதித்துள்ளது.
கணவர் வீட்டில் இல்லாதபோது, மனைவி தனது தனிப்பட்ட கணினியை சட்டத்துக்குப் புறம்பாக தவறாக அணுகியதாகவும், பல்வேறு தகவல்களை பதிவிறக்கம் செய்ததுடன், தனது அறையில் ஒலிப்பதிவு கண்காணிப்பு சாதனத்தை நிறுவி தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்ததாக கூறப்படும் அதேவேளை இருவருக்கும் இடையிலான விவாகரத்து வழக்கும் அதே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கணவர் கொழும்பில் உள்ள ஒரு அரச வைத்தியசாலையில் வைத்தியராக பணியாற்றி வரும் நிலையில் மனைவி வட மாகாணத்தில் உள்ள ஒரு அரச வைத்தியசாலையில், வைத்திய நிபுணராக பணியாற்றுகிறார்.
தனது அனுமதியின்றி தனது வட்ஸ்அப் கணக்கில் உள்ள மின்னணு தகவல் தொடர்புகளை அணுக தனது கணினியை பயன்படுத்த முயற்சித்தது, . மூடப்பட்டிருக்கும் போது அறைக்குள் நுழைவதன் மூலமும், முடக்கப்பட்ட கணினிக்குள் நுழைவதன் மூலமும் வாதியின் தனியுரிமை குறித்த நியாயமான எதிர்பார்ப்பு மீறப்பட்டதாகவும், நம்பிக்கை மீறல் இருப்பதாகவும் கணவர் குற்றம் சாட்டினார். அதோடு விவகாரத்து கோரும் மனைவி, தனக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.
இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட கல்கிசை நீதிமன்ற மேலதிக மாவட்ட நீதிபதி, வழக்காளியின் உடமையில் உள்ள தரவுகள், ஆவணங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை எதிராளி சேகரிப்ப தைத் தடுக்கும் கட்டளையை கடந்த 6ஆம் திகதி வழங்கினார்.
அத்துடன், சட்டத்தரணிகள் உள்ளிட்ட மூன்றாம் தரப்பினரிடம் அந்த தகவல்களை பகிர்வதோ, பரப்புவதோ கூடாதென்றும் கட்டளை பிறப்பித்தார். மேலும் , வாதியின் அசையும், அசையா சொத்துக்களில் கண்காணிப்பு சாதனங்களை பொருத்துவதற்கும் தடை விதித்ததுடன் ஜூலை 15ஆம் திகதி வரை இந்த கட்டளை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.