அமெரிக்க தாய் ஒருவர், தங்கள் கழிவறையில் சில நாட்களாக இரத்தம் சிந்திக் கிடப்பதைக் கண்டு, ஒருவேளை தன் மகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பாளோ என அஞ்சியிருக்கிறார்.
ஆகவே, தெற்கு கரோலினாவில் வாழும் Lauren Ouzts Lee (32) என்ற அந்த பெண், அது குறித்து தன் குடும்பத்தினரிடம் கேட்க, அவரது மகள் Emma, அந்த இரத்தம் தன்னுடையதுதான் என்று கூற, அவளை யாராவது துஷ்பிரயோகம் செய்திருப்பார்களோ என பதற்றம் அடைந்திருக்கிறார். ஆகவே, அவர் Emmaவை அழைத்து, அவளிடம் அவளது பிறப்புறுப்பை யாரவது தொட்டார்களா என்று விசாரித்திருக்கிறார்.
Emmaவுக்கு ஐந்து வயது மட்டுமே ஆகிறது. தாய் கேட்ட கேள்விக்கு, இல்லை என்று தெளிவாக பதில் கூறிய Emma, சில நாட்களாகவே தான் சிறுநீர் கழிக்கும்போது இரத்தமும் சேர்ந்து செல்வதாகக் கூற, உடனே அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் Lauren. மருத்துவர்கள், அவளுக்கு சிறுநீரக பாதையில் தொற்று இருக்கலாம் என்று நினைத்து அதற்கு சிகிச்சை அளித்திருக்கிறார்கள்.
ஆனாலும், குணமடையாத Emmaவுக்கு கடுமையான வலியும் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, மீண்டும் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அவரது தாய். அப்போது மருத்துவர்கள் கூறிய செய்தி அந்த குடும்பத்தையே அதிரவைத்துள்ளது.
ஆம், Emma ஒரு அபூர்வ வகை சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்ற செய்திதான் அது. நான்கு மணி நேர அறுவை சிக்கிச்சையில் Emmaவின் பாதிக்கப்பட்ட சிறுநீரகம் அகற்றப்பட, ஆறு மாதங்கள் கீமோதெரபி சிகிச்சைக்குப் பின் முடியெல்லாம் கொட்டி அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிவிட்டாள் அவள்.
ஆனால், இப்போது சிகிச்சை முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது Emmaவுக்கு. ஒரு சிறுநீரகம் இல்லாத நிலையில், சற்றே கவனமாக அவள் விளையாடவேண்டும், மற்றபடி அவளுக்கு பிரச்சினை ஒன்றுமில்லை என்று கூறிவிட்டார்கள் மருத்துவர்கள்.
இன்னொரு முக்கியமான விடயம், கீமோதெரபியால் முடியெல்லாம் கொட்டிப்போன நிலையில், இப்போது தலையில் மீண்டும் சுருள் சுருளாக முடி வளர்ந்துவிட, சும்மா ஸ்டைலாகிவிட்டாள் Emma.