தனது காதலை ஏற்றுக்கொள்ளாத உறவுக்கார பெண்ணை நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருக்கும் போது தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துள்ள இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சேர்ந்த பாண்டியன் என்பவரது மகள் மோனிகா(18). திருச்சி தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்ததால் முத்துப்பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி வந்துள்ளார்.
இவரது உறவினர் சிவசங்கரன்(28). இறால் பண்ணையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வரும் இவர் மோனிகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
மோனிகா இவரது காதலை ஒப்புக் கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி மோனிகாவின் பெற்றோரும் இதற்கு சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கரன் நேற்று இரவு தூங்கிக்கொண்டிருந்த மோனிகாவை அம்மிக் கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த மோனிகாவை மீட்ட உறவினர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
இதனிடையே, சிவசங்கரனை பிடித்த அப்பகுதி மக்கள் பொலிசாரிடம் ஒப்படைத்ததோடு, பொலிசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.