கொரோனா வைரஸ், டெல்டா வைரஸ், கருப்பு பூஞ்சை என பல வைரஸ்களால் மக்கள் அதிர்ச்சியிலிருந்து மீளாத நிலையில், இங்கிலாந்தில் நோரோ வைரஸ் பரவுவதை சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
நோரோ வைரஸ் (Norovirus) ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவக் கூடியது ஆகும்.
‘ஃபுட் பாய்சனிங்’ என்றும் நோரோ வைரஸ் அறியப்படுகிறது. இது உணவுக் குடலில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.
அறிகுறிகள்
வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, உடல் வலி, தலை வலி ஆகியவை நோரோ வைரசின் அறிகுறிகளாகும்.
இந்த வைரஸ் தாக்கி 12 - 48 மணி நேரத்தில் அறிகுறிகள் தென்படும். இவை மூன்று நாள்கள் வரைகூட இருக்கும்.
அறிகுறிகள் இல்லாமல்கூட இந்த வைரஸ் பாதிப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது.
எப்படி பரவும்?
சுத்தமில்லாத உணவு, தண்ணீர், சுத்தமில்லாத சுற்றுப்புறம் ஆகியவற்றிலிருந்து இந்த வைரஸ் மற்றவர்களுக்குப் பரவுகிறது.
இதுமட்டுமின்றி, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபருடன் உணவு, பாத்திரங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ளும்போது இந்தத் தொற்றுக்கு ஒருவர் உள்ளாகக்கூடும்.
எப்படி தடுக்கலாம்?
இந்த வைரஸ் பாதிப்புக்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், கோவிட் -19 நெறிமுறைகளைப் பின்பற்றினால் போதும் தடுத்துவிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.