பல்கலைகழகத்தினால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற இரண்டு நீதிபதிகளை கொண்ட குழுவின் விசாரணைக்குழுவின் அறிக்கையை தாக்கல் செய்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக இன்று கூட்டப்படவிருந்த விசேட பேரவை கூட்டமே இடைநிறுத்தப்பட்டது.
தான் கலந்து கொள்ளாத விசாரணை அமர்வில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று பேராசிரியரால் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர், முன்னாள் துணைவேந்தர்கள் மூவர், பதிவாளர், விசாரணைக்குழுவின் இரண்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள், பேரவை உறுப்பினர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இந்த மனுவை ஆராய்ந்த மேல்முறையீட்டு நீதிமன்றம், வழக்கின் அடுத்த தவணை வரையில் பேராசிரியருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரித்து அறிக்கையிடுவதையும் அதற்கான பேரவை அமர்வை இடைநிறுத்துமாறும் பேரவையின் செயலாளருக்கு நேற்று மாலை மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் தொலைநகல் மூலம் அறிவிக்கப்பட்டது.
பின்னணி
யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் பேராசிரியர் ஒருவரிற்கு எதிராக மாணவிகள் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து அவருக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த விசாரணை அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அவர் பல்கலைகழகத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார்.எனினும், தன் மீதான குற்றச்சாட்டுக்களை பேராசிரியர் மறுத்தார்.
இதேவேளை, தன்னை மீளவும் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் கடமையில் இணைக்க வேண்டுமென பேராசிரியர் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், முன்னைய அறிக்கை நீண்டகாலத்திற்கு முன்னர் தயாரிக்கப்பட்டிருந்ததால், புதிய விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி பல்கலைகழக நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
இதன்படி ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி பரமராஜா, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி அரியநாயகம் ஆகியோரை கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, மீள்விசாரணை நடந்தது.
இதேவேளை, பேராசிரியர் இடைநிறுத்தப்பட்டிருந்த பல வருடங்களாக அவருக்கு பல்கலைகழகம் ஊடாக பெரும் தொகை பணம் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. அவரை இடைநிறுத்திய பல்கலைக்கழகம், மறுபுறம், ஊதியத்தை வழங்கி வருகிறது. பல்கலைகழகத்தின் இந்த இரட்டை நிலைப்பாட்டையும் பேரவை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டி, தெளிவான முடிவொன்றை எட்டுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஒன்றில், கடமையில் இல்லாத பேராசிரியருக்கு ஊதியம் வழங்குவதை நிறுத்த வேண்டும், அல்லது அவரது நிபுணத்துவத்தை முறையான ஏற்பாடுகளுடன் பயன்படுத்த வேண்டும் என யாழ் பல்கலைகழக பேரவையில் வலியுறுத்தி வந்தனர்.
இத்தகைய பின்னணியில், புதிய விசாரணைகள் நடந்தன.
முன்னர் பேராசிரியருக்கு எதிராக சாட்சியமளித்த பல மாணவிகள் குடும்ப வாழ்க்கையில் இணைந்தமை உள்ளிட்ட காரணங்களினால் பலர் மீள் விசாரணையில் சாட்சியமளிக்கவில்லை. எனினும், சுமார் 4 இற்கும் குறையாத முன்னாள் மாணவிகள் புதிய விசாரணையில் பேராசிரியருக்கு எதிராக சாட்சியமளித்தனர்.
இந்த விசாரணைகள் முடிந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.