திருமணம் முடிந்து 15 நாட்களில் இந்தியாவிலிருந்து கனடாவுக்கு புறப்பட்டுச் சென்ற இளம்பெண்ணின் கணவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ள நிலையில், அந்த பெண் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2019ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 2ஆம் திகதி, Lovepreet Singh (23)க்கும், Beant Kaur (21)க்கும், பஞ்சாபிலுள்ள Khote Gobindpura கிராமத்தில் கோலாகலமாக திருமணம் நடந்தேறியது.
திருமணம் முடிந்து 15 நாட்கள் ஆன நிலையில், ஆகத்து மாதம் 17ஆம் திகதி, கல்வி கற்பதற்காக கனடா புறப்பட்டுச் சென்றார் Beant Kaur. அவரது கல்வி செலவுக்காக Lovepreet Singh 25 லட்ச ரூபாய் செலவு செய்ததாக தெரிவிக்கிறார் Lovepreet Singhஇன் தந்தை. மனைவி, தன்னையும் கனடாவுக்கு அழைத்துச் செல்வாள் என Lovepreet Singh காத்திருக்க, Beant Kaur கணவனை கனடாவுக்கு அழைக்காதது மட்டுமல்ல, அவருடனான தொடர்பையே துண்டித்துவிட்டார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜூன் மாதம் 23ஆம் திகதி தனது பண்ணையில் மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளார் Lovepreet Singh. முதலில் இது குறித்து பொலிசாரிடம் புகாரளிக்காமல், Lovepreet Singh வயலுக்கு பூச்சி மருந்து அடிக்கும்போது இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தார் கூறியிருந்த நிலையில், பின்னர் இந்த விடயம் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியுள்ளது. இப்போது, Beant Kaur மீது, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 420இன் கீழ் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள Beant Kaur, தான் தன் கணவரை கனடாவுக்கு அழைத்துக்கொள்ள முயன்றதாகவும், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அவரது கோரிக்கை பரிசீலிக்கப்பட இயலாமல் போயிற்று என்றும் கூறியுள்ளார்.