வட சென்னை பகுதியில் மூதாட்டிகளை குறிவைத்து நகைகளை திருடும் கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வட சென்னை பகுதிக்கு உட்பட்ட மின்ட், ஜி.எச் சாலை, திருவொற்றியூர் பகுதிகளில் ஷேர் ஆட்டோவில் வரும் மூதாட்டிகளை குறிவைத்து அவர்களின் கவனத்தை திசை திருப்பி ஒரு கும்பல் நகைகளை திருடி வருவதாக தொடர்ந்து திருவொற்றியூர் போலீசாருக்கு புகார்கள் குவிந்தன.
குறிப்பாக பாதிக்கப்பட்ட மூதாட்டிகள் ஷேர் ஆட்டோவில் வரும்போது உடன் பயணிக்கும் இக்கும்பலைச் சேர்ந்த பெண்கள் மூதாட்டிகளிடம் கனிவாகப் பேசி "உங்கள் நகை அறுந்துள்ளது கழற்றி பையில் வைத்துக் கொள்ளுங்கள்" என அவர்களின் கவனத்தை திசைத் திருப்பி மூதாட்டிகள் நகைகளை பையில் வைத்தப் பின்பு யாருக்கும் தெரியாமல் பிளேடால் பையை கிழித்து நகைகளை திருடி வந்துள்ளனர். இச்சம்பவங்கள் தொடர்பாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் திருவொற்றியூர் உதவி ஆணையர் ஆனந்தன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடும் பகுதிகளில் உள்ள் சி.சி.டி.வி காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த தீவிர விசாரணையின் முடிவில் மூதாட்டிகளின் கவனத்தை திசை திருப்பி நகைகளை திருடும் கும்பல் பழனியைச் சேர்ந்த கௌரி (40), சாந்தி (35) மற்றும் சின்னத்தாயி (30) ஆகியோர் என்பதை போலீசார் கண்டறிந்து அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட் டவர்களிடமிருந்து 12.5 சவரன் நகைகளையும், போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவர்கள் மூவர் மீதும் சென்னை மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களிலும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவருக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டனர்.