ஒரு வருடத்தில் கசந்த காதல் திருமணம்.. நிர்வாண கோலத்தில் இளம்பெண் படுகொலை..!

இளம் வயதிலேயே காதல் பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் தான் காதலிக்கும் நபரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் திருமணம் செய்து கொள்ளும் பெரும்பாலான பெண்களின் வாழ்க்கை பரிதாபத்தில் தான் முடிந்து போகிறது. அந்த வகையில் திருப்பூரில் 19 வயது இளம்பெண் தன் காதல் கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையை சேர்ந்தவர் கண்ணையன், மணிமுத்து தம்பதியினர். இவர்களுக்கு வைஷ்ணவி (19) உள்ளிட்ட 4 மகள்கள் உள்ளனர். கண்ணையன் நாட்டரசன்கோட்டையில் வசித்து வருகிறார். மணிமுத்து தனது 4 மகள்களுடன் திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். வைஷ்ணவி அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அதே நிறுவனத்தில் பணியாற்றிய தேனி மாவட்டம், போடியை சேர்ந்த அருண்குமார் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இதனையடுத்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி அருண்குமார் வைஷ்ணவியை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். 

திருமணத்திற்கு பிறகு தான் அருண்குமாரின் சாயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளுக்கத் தொடங்கியுள்ளது. கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் அருண்குமாருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால், திருமணத்திற்கு பின்னர் காதல் தம்பதியினர் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது. பிரச்சனை வரும் போது அருண்குமார், தனது மனைவி வைஷ்ணவியை அடித்து துன்புறுத்தி அவரது தாய் வீட்டில் விட்டு விட்டு சொந்த ஊரான போடிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த வாரம் அருண்குமார் மீண்டும் போயம்பாளையம் வந்துள்ளார். அப்போது மாமியார் மணிமுத்துவிடம் தனது மனைவி வைஷ்ணவியை அழைத்து சென்று தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்குவதாக தெரிவித்துள்ளார். மேலும், இனிமேல் சந்தோஷமாக வாழலாம் எனவும் ஆசைவார்த்தை கூறி அழைக்கவே அதனை நம்பிய வைஷ்ணவி கணவன் அருண்குமாருடன் சென்றிருக்கிறார். தொடர்ந்து பாண்டியன்நகர் பகுதியில் உள்ள பண்ணாரியம்மன் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு வீடு நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து பார்த்தனர். அப்போது வைஷ்ணவி கழுத்தில் காயங்களுடன் நிர்வாண கோலத்தில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.  இது குறித்து திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த  போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள கணவனை போலீசார் தேடி வருகின்றனர். திருமணமான ஓராண்டு  கூட ஆகாத நிலையில் பெண் உயிரிழந்ததால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad