யாழில் சகோதரனை தாக்கி விட்டு தங்கச்சியை கடத்திய கும்பல்.

யாழ்ப்பாண மாவட்டம் தெல்லிப்பழை பகுதியில் இளம் பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (06) சனிக்கிழமை காலை 7 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் கூறுகின்றனர் . ஹைஏஸ் வாகனத்தில் வந்தவர்களால் இளம் பெண் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் பணிபுரியும் குறித்த இளம் பெண் தனது சகோதரனது மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சகோதரன் மீது தாக்குதல் நடத்திவிட்டு இளம்பெண்ணை கடத்திச் சென்றதாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இணைப்பு 02

தெல்லிப்பளை பகுதியில் இளம் யுவதியொருவர் வாகனத்தில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டதாக, உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
நேற்று முன்தினம் (6) காலை இந்த சம்பவம் நடந்தது.

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் யுவதி, பணிக்கு சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்டார். அவரது சகோதரனின் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, வாகனத்தில் வந்த இளைஞர் குழுவினர், சகோதரனை தாக்கி விட்டு, யுவதியை கடத்திக் கொண்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, யுவதியின் குடும்பத்தினரால் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, காதல் விவகாரம் ஒன்றை தொடர்ந்தே இந்த சம்பவம் நடந்துள்ளது பொலிசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வைத்தியசாலையில் பணிபுரியும் யுவதியை, ஏழாலையை சேர்ந்த இளைஞன் ஒருவரே கடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளைஞன் ஒரு தலை காதலன் என்றும், யுவதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், பலவந்தமாக கடத்திச் சென்றதாகவும், யுவதியின் உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுவதியுடன் சென்ற சகோதரனை தாக்கி, யுவதியை ஏற்றிச் சென்றதால், அது கடத்தல் வழக்காக பொலிசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடத்தலில் ஈடுபட்ட இளைஞன் தரப்பினர், யுவதியும், தானும் காதலர்கள் என்றும், நேற்று பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாவோம் என்றும் குறிப்பிட்டிருந்தனர். எனினும், நேற்று அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகவில்லை.

இன்று காலை முன்னிலையாகுவதாக தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பெற்றோரின் வற்புறுத்தி வேறு திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததாகவும், வரும் 15ஆம் திகதி திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், நிச்சயிக்கப்பட்ட வெளிநாட்டு மாப்பிள்ளை ஓரிரு தினங்களின் முன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்ததும், யுவதியை வாகனத்தில் சென்று ஏற்றி வந்ததாகவும் இளைஞன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறிப்பிட்ட தினத்தில் இளைஞன் தரப்பினர் முன்னிலையாகாமல் தவிர்ப்பதால், யுவதியை பலவந்தமாக கடத்தி சென்றிருக்கலாமென்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது.

யுவதி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான பின்னரே, உண்மை நிலவரம் தெரிய வரும்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad