அமெரிக்காவில் நடப்பு ஆண்டில் இதுவரை நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. துப்பாக்கிச் சூடு கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக அரசு கூறியிருந்தாலும், அங்கிருந்து வரும் தரவுகள் மாறுப்பட்ட தகவல்களையே தெரிவிக்கின்றன.அமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் ஒரு கோடியே 80 லட்சம் துப்பாக்கிகள் விற்பனையாகியுள்ளது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இது அரசாங்கத்தின் ஒரு முக்கிய வருவாயாக உள்ளது. நடப்பு ஆண்டில் அங்கு நடைபெற்ற துப்பாக்கிச்சூடு வன்முறைகளில் 1,410 சிறார்கள் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்பான தகவல் தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த உயிரிழப்பு எண்ணிக்கை 2020-ம் ஆண்டு 1,375 ஆகவும், 2019-ம் ஆண்டு 991 ஆகவும் இருந்துள்ளது. நடப்பு ஆண்டில் சிறார்கள் உயிரிழப்பு அதிகமாகியுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 2021-ம் ஆண்டு 41,000 அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவில் துப்பாக்கிச்சூடு வன்முறைகளில் அரங்கேறிய அதிகபட்ச உயிரிழப்பு ஆகும்.