பாகிஸ்தான் நாட்டில் இந்து கோவில் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி இந்து கடவுள் சிலையை உடைத்துள்ளனர். பாகிஸ்தானில் கராச்சி நகரில் இந்து கோவில் ஒன்று இருக்கிறது. அந்த கோவிலில் ஜோக் மாயா என்ற பெண் கடவுளின் சிலை உள்ளது. இந்த நிலையில் திங்கள்கிழமை அன்று மர்ம நபர் ஒருவர் கோவிலுக்குள் சுத்தியலுடன் நுழைந்துள்ளார். அவர் சிலையை அடித்து உடைத்ததுடன் கோவிலையும் சூறையாடி உள்ளார்.
இந்த சம்பவம் அறிந்த அந்தப் பகுதி மக்கள் அந்த நபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சிலை உடைப்புக்கு பாஜக தலைவர் மன்ஜுந்தர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும்சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்படும் அரசு ஆதரவு பயங்கரவாத தாக்குதல் என்று குற்றச்சாட்டாகவும் கூறியுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதத்தில் சிந்த் மாகாணத்தில் ஹனுமன் தேவி மாதா கோவிலை அடையாளம் தெரியாத கொள்ளை கும்பல் சூறையாடி விட்டு அங்கிருந்து நகை மற்றும் ஆயிரக்கணக்கான பணம் ஆகியவற்றை எடுத்து சென்று விட்டது. இது போன்ற தாக்குதல் சம்பவங்களுக்காக சர்வதேச சமூகமானது தொடர்ந்து பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறது.