அணு ஆயுதங்களைத் தடை செய்தல் தொடர்பான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காகவும், அதனை ஏற்று அங்கீகரிக்கும் செயன்முறையை ஆரம்பிப்பதற்காகவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் சமர்ப்பித்த குறித்த யோசனைக்கு நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது அனுமதி கிடைத்துள்ளது.
அணு ஆயுதங்களைப் பரந்தளவில் தடை செய்வதற்காக உலகளாவிய ரீதியில் முதலாவது பல தரப்பு ஒப்பந்தமான, அணு ஆயுதங்களைத் தடை செய்தல் தொடர்பான ஒப்பந்தம் 122 நாடுகளின் ஒத்துழைப்புடன் 2017ஆம் ஆண்டு யூலை மாதம் 07 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் சபையில் நிறைவேற்றப்பட்டது.
குறித்த ஒப்பந்தம் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், இதுவரை அதற்காக கையொப்பமிட்ட 86 நாடுகளில் 57 நாடுகள் ஏற்று அங்கீகரித்துள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் இவ் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக சிறிலங்காவும் அதற்குச் சார்பாக வாக்களித்து ஒத்துழைப்பு வழங்கியதுடன், அதற்கான உலகளாவிய தொடர் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக ஊக்குவித்தும் வருகின்றது.
குறித்த ஒப்பந்தத்தில் பங்கெடுக்கும் நாடுகள் அணு ஆயுதமோ அல்லது வேறு அணுவாலான வெடிபொருட்களை தயாரித்தல், பரிசோதித்தல், நிர்மாணித்தல், உற்பத்தி செய்தல், பரிமாற்றுதல், தன்னகத்தே வைத்திருத்தல், களஞ்சியப்படுத்தல் மற்றும் அவற்றைப் பயன்படுத்துவதாக அச்சுறுத்தல் அல்லது தமது நிலப்பரப்பில் அவ்வாறான ஆயுதங்களை நிலைப்படுத்துவதற்கு இடமளித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு எவருக்கேனும் ஒத்துழைத்தல், ஊக்குவித்தல் அல்லது தூண்டுதல் போன்ற செயற்பாடுகள் குறித்த ஒப்பந்தத்தின் மூலம் தடை செய்யப்பட்டுள்ளது.
இவ் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுதல் பேரழிவு ஆயுதங்களுக்கு எதிரான மற்றும் அணு நிராயுதத்தன்மைக்கு சார்பாகவுள்ள சிறிலங்காவின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டுடன் பொருத்தப்பாடானதாகும்.
அதற்கமைய, சிறிலங்கா குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காகவும், அதனை ஏற்று அங்கீகரிக்கும் செயன்முறையை ஆரம்பிப்பதற்காகவும் வெளி விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது