பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த கல்லூரி மாணவரை பள்ளி சிறுமிகள் தீர்த்துக்கட்டிய சம்பவம் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது பாலியல் தொந்தரவு கொடுத்த ஆண் நண்பரை கல்லூரி மாணவி தீர்த்துக்கட்டிய சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தேசப்பிரியா, எஸ்ஆர்எம் கல்லூரியில் படித்தபோது பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. செந்தில் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று சொல்லி மாணவியிடம் பழகி வந்திருக்கிறார். இதன்பின்னர் மேற்படிப்பிற்காக கேளம்பாக்கம் கல்லூரியில் படித்தபோது செந்தில் உடனான பழக்கம் நின்றுவிட்டது. அதன்பின்னர் அருண்குமார் என்பவருடன் பழகி வந்திருக்கிறார் தேசப்பிரியா. அதற்கு காரணம் செந்திலுக்கு திருமணம் ஆனது என்று தெரிந்ததுதான்.
திருமணம் ஆகவில்லை என்று சொன்னதால்தான் செந்திலுடன் நெருங்கி பழகி வந்திருக்கிறார். ஆனால் அவருக்கு திருமணம் ஆனது என்று தெரிந்ததும் அவருடனான தொடர்பை துண்டித்து விட்டு அருண்குமார் அவருடன் பழகி வந்திருக்கிறார். ஆனால் தேசப்பிரியாவை விடாமல் துரத்தி இருக்கிறார் செந்தில்.
பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததோடு அல்லாமல் தன்னை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி வந்திருக்கிறார் செந்தில். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தேசப்பிரியா தனது நண்பர் அருண்பாண்டியன் உள்ளிட்டோர் இடம் இது குறித்து பேச அவரை கொலை செய்வது தான் சரி என்ற முடிவுக்கு வர, செந்திலை சென்னை கேளம்பாக்கம் நெடுஞ்சாலைக்கு வரவழைத்திருக்கிறார் தேசப்பிரியா.
அப்போது தேசப்பிரியாவும் அவரது நண்பர் அருண்பாண்டியனும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செந்திலை குத்திக் கொலை செய்திருக்கிறார்கள். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் பிடித்திருக்கிறார்கள். இருவரையும் காவல் நிலையத்தில் ஒப்படைக்க போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். நீதிபதி அளித்த தீர்ப்பின்படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆண் நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்த கல்லூரி மாணவியின் செயல் திருவண்ணாமலை மற்றும் கேளம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.