இந்த ஆண்டின் தொடக்கத்தில் யூடியூப் நிறுவனம் ஜெர்மனி நாட்டில் செயல்பட்டு வரும் ரஷ்யாவிற்கு சொந்தமான இரண்டு யூடியூப் சேனல்கள் முடக்கியது. அதாவது அந்த சேனல்கள் கொரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்களை பகிர்ந்ததால் தான் யூடியூப் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறப்பட்டது. அந்த நடவடிக்கையை தொடர்ந்து யூடியூப் நிறுவனம் ரஷ்யா புதிதாக தொடங்கியிருந்த “டுடே” என்ற சேனலையும் எந்த அறிவிப்பும் இன்றி திடீரென முடக்கியுள்ளது.
இதுகுறித்து குற்றம்சாட்டிய ரஷ்யா, இந்த விவகாரம் தொடர்பில் யூடியூப் நிறுவனத்திற்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. அதேபோல் இது ரஷ்ய ஊடகத்தின் மீது நடத்தப்பட்ட போர் என்று கூறிய செய்தி நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் ஒருவர் தனது கண்டனத்தையும் தெரிவித்துக் கொண்டார். இதற்கிடையே ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் சம்பந்தப்பட்ட யூடியூப் நிறுவனம் மற்றும் அரசு அமைப்புகள் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் கூகுள் நிறுவனத்திடம் ரஷ்ய செய்தி ஒழுங்குமுறை ஆணையம் தங்கள் நாட்டின் செய்திச் சேனலின் மீதான தடையை நீக்க வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த விவகாரம் ரஷ்யா மற்றும் ஜெர்மனி நாடுகள் இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.