நுவரெலியா – பீட்ரூ தோட்டத்தில் ஒருவர் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மனைவியின் வாக்குமூலம் வெளியாகியுள்ளது. நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பீட்று தோட்ட பிரிவான சின்னகாடு தோட்டத்தில் சனிக்கிழமை மூன்று பிள்ளைகளின் தந்தையான காளிமுத்து சண்முகம் தர்மராஜ் (வயது 46) வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில்,கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் மனைவி கைது செய்யப்பட்டிருந்ததுடன்,தற்போது அவரின் வாக்குமூலம் வெளியாகியுள்ளது.
“என் கணவருக்கும் எனக்கும் குடும்ப தகராறு இருந்தது. தகராறு சண்டையாக மாறியது.இதன்போது அவர் என்னை அடித்தார் பதிலுக்கு நானும் அவரை தடியால் அவரின் தலையில் அடித்தேன். சாக வேண்டும் என அடிக்கவில்லை. இவருடைய தலையிலிருந்தும்,காதிலிருந்தும் இரத்தம் வருவதை கண்டேன் அவர் மயங்கி கீழே விழுந்தார் நான் பயந்து பிள்ளைகளை கூட்டிக்கிட்டு வீடு மூடிவிட்டு ஓடிவிட்டேன்.” எனவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த தர்மராஜாவின் பிரேத பரிசோதணை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் (26) மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது தலையில் கட்டையால் தாக்கப்பட்டும், கைகளில் தாக்கப்பட்டும் அதிகளவன இரத்தம் வெளியாகிய நிலையில் உயிரிழப்பு சம்பவித்துள்ளதாக தனது அறிக்கையில் சட்டவைத்தியர் தெரிவித்துள்ளார்.
இதன்போது தனது கணவரை தான் கட்டையால் தாக்கியதாகவும், சாக வேண்டுமென தான் தாக்கவில்லை என்றும் உயிரிழந்தவரின் மனைவி சுப்பிரமணியம் சசிக்கலா (வயது 43) தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சடலம் பிரேத பரிசோதணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவியான சுப்பிரமணியம் சசிக்கலாவை நுவரெலியா குற்றத்தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தடுத்து வைத்துள்ளதுடன்,திங்கட்கிழமை நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.