பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்ட கீழமை நீதிமன்ற வளாகத்தில் கடந்த 23-ம் தேதி நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பைக் ஏற்படுத்தியது. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த வருட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இது தீவிரவாத அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 2 நபர்கள் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதில் ஒருவர் ஜெர்மனியிலும், மற்றொருவர் பாகிஸ்தானிலும் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அந்நாடுகளின் அரசுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து ஜெர்மனியில் ஜஸ்வந்த் சிங் முல்தானி(45) என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜெர்மனி காவல்துறையினர் வழங்கிய தகவலை தொடர்ந்து, இந்தியாவில் இருந்து காவல்துறை சிறப்புப் படையினர் அங்கு சென்று விசாரணை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.