சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூர் பகுதியைச் சேர்ந்த ரூபேஷ்குமாருக்கும் அதே மாநிலத்தில் ராஜ்பூர் பகுதியைச் சேர்ந்த துளசிக்கும் முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் முதல் இவர்கள் காதலித்து வந்திருக்கிறார்கள்.
இவர்களின் காதல் விவகாரம் துளசியின் பெற்றோருக்கு தெரிய வர இருவரையும் பிரிக்கும் நோக்கத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பாக தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி அடுத்து உள்ள பிள்ளகளத்தூர் பகுதியில் இருக்கும் தனியார் நூற்பாலை வேலைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். துளசி பணிக்கு வந்த போது காதலன் ரூபேஸ்குமாரையும் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்.
இருவரும் நூற்பாலையில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் தனித்தனியாக வசித்து வந்திருக்கிறார்கள். நேற்று இருவரும் தொழிற்சாலைக்கு சென்று விட்டு வந்த நிலையில் திருமணம் குறித்து இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. துளசி பெற்றோர்கள் சொல்லும் மாப்பிள்ளை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்ல கடும் ஆத்திரத்தில் இருந்திருக்கிறார்.
இதன் பின்னர் பூ , பழங்கள் வாங்கிக்கொண்டு அந்த பையில் ஒரு கத்தியையும் வைத்துக்கொண்டு மீண்டும் துளசியை சந்திக்க சென்றிருக்கிறார் ரூபேஷ்குமார் . திருமணம் செய்வது குறித்து மீண்டும் மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, அப்போது துளசி பிடிவாதமாக பெற்றோர் சொல்லும் நபரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்ல, பூ, பழங்களுக்கு இடையே வைத்திருந்த கத்தியை எடுத்து மார்பு கழுத்து வயிறு என்று ஒன்பது இடங்களில் சரமாரியாக குத்தி இருக்கிறார்.
அலறி துடித்து ரத்த வெள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார் துளசி. இதையடுத்து குமாரும் தன்னை தானே கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். அதே நேரத்தில் அங்கு திரண்டவர்களால் போலீசார் வரவழைக்கப்பட்டு துளசியின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ரூபேஷ்குமார் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.