தனது சகோதரனின் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி, சிறுமியை விடுதிக்கு அழைத்துச் சென்று அறையொன்றை எடுத்து, அதில் இரண்டு நாட்கள் தங்கியிருந்த பாடசாலை மாணவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவரே, கண்டி, உடுநுவர சிறுவர் தடுப்பு மத்திய நிலையத்தில், கம்பளை நீதவான் மற்றும் மாவட்ட நீதவான் சினித் விஜேசேகரவின் உத்தரவின்பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கம்பளை நகரிலுள்ள பிரபலமான பாடசாலையில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவன், மற்றுமொரு மகளிர் பாடசாலையில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவியையே இவ்வாறு விடுதிக்கு அழைத்துச்சென்று இரு நாட்கள் தங்கியுள்ளார்.
8 மாதங்களாக இவர்களுக்கிடையில் காதல் மலர்ந்துள்ளது. கடந்த 19 ஆம் திகதி மேலதிக வகுப்புக்கு செல்வதாகக் கூறி, இருவரும் நாவலப்பிட்டியவில் நீர்வீழ்ச்சியொன்றுக்குச் சென்று மாலைவரையிலும் நேரத்தை கழித்துள்ளனர். அதன்பின்னர் நுவரெலியா சென்றுள்ளனர். ஒன்லைன் ஊடாக கற்பதற்கு பெற்றோர் வாங்கி கொடுத்த கையடக்க தொலைபேசியை 7 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்துவிட்டே நுவரெலியா சென்றுள்ளனர். விடுதியில் சிறுவர்களுக்கு அறைகள் கிடைக்காது என்பதால் தனது அண்ணாவின் தேசிய அடையாள அட்டையை திட்டமிட்ட அடிப்படையில் எடுத்துச்சென்றுள்ளார். சிறுமியின் தாய் செய்த முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இவ்விடம் தெரியவந்துள்ளது.