திருமணம் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்திய கள்ளக்காதலியை கொன்று கிணற்றில் வீசிச் சென்றது அம்பலமாகியிருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் கொசவம்பட்டி கிராமத்தில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.
கொசவம்பட்டி கிராமத்தில் ஒதுக்குப்புறமாக இருந்த கிணற்றில் கடந்த மாதம் 23ஆம் தேதியன்று ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. அந்த பெண்ணை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் தொடர்ந்து அப்பெண்ணை கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பெண்ணின் சடலம் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் அந்த பெண் அதே கிராமத்தை சேர்ந்த லலிதா என்பது தெரிய வந்தது. அவரது கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்னர் காலமாகி விட்டதால் அவர் தனியாக வசித்து வந்ததும் தெரிய வந்திருக்கிறது.
இந்த நிலையில்தான் அதே பகுதியைச் சேர்ந்த சுரேந்தர் என்பவருடன் லலிதாவுக்கு பழக்கம் இருந்ததும், இருவரும் நெருக்கமாக பழகி வந்திருக்கிறார்கள் என்கிற விவரம் தெரிய வந்ததும் லலிதாவின் காதலர் சுரேந்தரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது காதலித்து வந்த 40 வயது பெண்ணை கொலை செய்தது தொடர்பாக அளித்துள்ள வாக்குமூலம் காவல்துறையை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
லலிதா தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி நச்சரித்து வந்ததால் அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக சொன்ன சுரேந்தர், கடந்த மாதம் 15ஆம் தேதி இருவரும் சந்தித்தபோது திருமணம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த சுரேந்தர் லலிதாவை கொலை செய்துவிட்டு கிணற்றில் வீசியதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
சுரேந்தர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் போலீஸார்.