கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் வீட்டின் அருகே உள்ள ஒருவர் வீட்டிற்கு பல்லடத்தில் சேர்ந்த ஜெக பிரியன் (21) என்ற தனியார் நிறுவன ஊழியர் அடிக்கடி வந்து செல்வார். அப்போது ஜெக பிரியனுக்கு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. மாணவி அவருடன் அண்ணன் என்ற முறையில் பழகி வந்தார். அப்போது அவர்களுக்கிடையே நெருக்கம் அதிகமானது. சம்பவத்தன்று மாணவியுடன் பேசிக்கொண்டிருந்த ஜெக பிரியன் தவறாக நடக்க முயன்றார். இதில் அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போட்டார். உடனடியாக அவர் நடந்த சம்பவங்களை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
பின்னர் மாணவி அவருடன் பேசுவதையும் பழகுவதையும் முற்றிலுமாக தவிர்த்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜெகபிரியன், மாணவியை பழிவாங்கும் நோக்கில் மாணவியின் புகைப்படத்துடன் போலியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கினார். அதில் மாணவியின் செல்போன் எண்ணை பதிவு செய்து எப்போது வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம் என்று பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த சிலர் மாணவிக்கு தொடர்பு கொண்டு பேசினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுகுறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஆய்வு செய்தபோது ஜெக பிரியன் போலியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தொடங்கி மாணவியை அவமானப்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்திந் சிறையில் அடைத்தனர்