விடுதியில் அறை எடுத்து தங்கி காதலர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாகி வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் அப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
துறையூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அந்த தங்கும் விடுதியில் சபரீசன், நிஷா நந்தினி இருவரும் அறை எடுத்து தங்கி இருக்கிறார்கள் . நேற்று காலையில் விடுதி ஊழியர்கள் அவர்களுக்கு டிபன் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். டிபன் கொடுக்கும்போது, மதிய உணவுக்கு நீங்கள் வர வேண்டாம் நாங்களே வந்து வாங்கி கொள்கிறோம் என்று கூறிவிட்டு அறைக்கதவை சாத்தி இருக்கிறார்கள்.
அதன் பின்னர் சொன்னபடி மதிய உணவிற்கு அவர்கள் இருவரும் வராததால், அவர்கள் அறைக்கு வெளியே நின்று காலிங் பெல்லை அழுத்தி இருக்கிறார்கள். வெளியே யாரும் வரவில்லை. அடுத்தடுத்து வந்து அழைப்பு மணியை அடித்தும் கதவு திறக்கவே இல்லை.
இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் விடுதியின் மேலாளருக்கு தகவல் சொல்ல, அவர் வந்து பதட்டத்துடன் அறை கதவை உடைத்து உள்ளே சென்றபோது அங்கே சபரீசனும் சாந்தினியும் வாயில் நுரை தள்ளியபடி படுக்கையில் சடலமாக கிடந்த இருக்கிறார்கள். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக துறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலை கேட்ட துறையூர் போலீசார் உடனே அந்த விடுதிக்குச் சென்று சபரீசன் ,நிஷா நந்தினி இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், நிஷாந்தினி தாம்பரம் கடம்பரி பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்திருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சபரீசன் என்பதும் தெரிய வந்திருக்கிறது.
நிஷா நந்தினி -சபரீசன் பழக்கத்திற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கலாம். அதனால் தான் இருவரும் விடுதியில் அறை எடுத்து விஷமருந்தி தற்கொலை செய்திருக்கிறார்கள் என்று போலீசார் அந்தக் கோணத்தில் மேற்கொண்டு விசாரணையை தொடர்கின்றனர். அதேநேரம் நந்தினிக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்றும் , தாம்பரம் காவல் நிலையத்தில் அவரை காணவில்லை என்று அவரது கணவர் ரஞ்சித் புகார் அளித்து இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.