மக்களின் பிரச்சினைகளை கேட்கவேண்டும் என்றும், அதனை அரசாங்கத்திடம் எடுத்துச் சொல்லவும் வேண்டும் எனவும் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா, மக்களின் பிரச்சினைகளை பேச முடியாவிடின் பதவியை தூக்கியெறியவும் தான் தயாரென தெரிவித்தார்.
மக்களை வரிசைகளில் நிற்கவைத்து அலையவிட தேவையில்லை எனத் தெரிவித்த அவர், அதனை கண்டும் காணாதது போல இருக்கமுடியாது என்றும் கூறினார்.
அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் வார்த்தைகளில் மக்களின் குரலே ஒலிக்கின்றது. ஆகையால், விமர்சனங்களுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் என்றும் நிமல் லன்சா கேட்டுக்கொண்டார்.
நாடு, பொருளாதார சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் அதிலிருந்து மீண்டெழுவதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லவேண்டும் என்றும் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை என்றால், எதிர்காலத்தில் தானும் வீதிக்கு இறங்கவேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் கூறினார்.