30 ஆண்டுகளில் 50 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்த ஆசிரியரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலருமான சசிகுமார் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளுக்கு நடந்த இந்த பயங்கர செயல் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலத்தில் மலப்புரத்தைச் சேர்ந்தவர் கே. வி. சசிகுமார். இவர் மலப்புரம் நகராட்சியின் கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலராகவும் இருந்தார். 38 ஆண்டுகள் சசிகுமார் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த மார்ச் 31ஆம் தேதி அன்று இவர் ஓய்வு பெற்றிருக்கிறார்.
பள்ளியின் சார்பில் மார்ச் 31ஆம் தேதி அன்று சசிகுமாருக்கு பிரம்மாண்டமான பிரியாவிடை கொடுக்கப்பட்டிருக்கிறது. அது குறித்து சமூக வலைத்தளமான முகநூலில் சசிகுமார் பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த சசிகுமார் நண்பர்கள் அவருக்கு வாழ்த்தும், பாராட்டுக்களும் தெரிவித்து வந்துள்ளனர் .
அதே நேரம் சசிகுமாரின் முன்னாள் மாணவர் ஒருவர் ஒரு அதிர்ச்சி தகவலை பதிவிட்டு இருக்கிறார். மஞ்சேரியைச் சேர்ந்த முன்னாள் மாணவர் குமார் என்பவர் ஆசிரியராக இருந்த கே. வி. சசிகுமார், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அவரிடம் படித்த மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக பதிவிட்டிருந்தார். கேரளாவில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது . இந்த பதிவை பார்த்த பலரும் சசிகுமாரை கடுமையாக விமர்சித்து கருத்து பதிவிட்டு வந்தனர். இதில் பாதிக்கப்பட்ட மாணவிகள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். அதன் பின்னர்தான் சசிகுமாரால் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்தது.
இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், கல்வித் துறை அதிகாரிகள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் சசிகுமார் மீது மலப்புறம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மாணவிகள் பலரும் சசிகுமாருக்கு எதிராக புகார் தெரிவித்ததால், அந்த புகார்களின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததால் இதையெல்லாம் அறிந்த சசிகுமார் தலைமறைவானார்.
சசிகுமாரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். தீவிர தேடுதலில் அவர் நேற்று கைது செய்யப்பட்டார். இதன் பின்னர் அவர் தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார்.
30 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பற்றி போலீசார் சசிகுமாரிடம் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிகளுக்கு நடந்த பயங்கரம் அதுவும் 50 மாணவிகள் பாதிக்கப்பட்டு இருக்கும் சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.