திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளை மணல் சின்னம்பிள்ளை சேனை பிரதேசத்தில் தகாத உறவினால் கருவான ஆறு மாத சிசு பலியான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சீனக்குடா வெள்ளை மணல் சின்னம்பிள்ளை சேனை பிரதேசத்தில் பாடசாலை வீதியில் அமைந்துள்ள வீட்டிலே குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது...
கணவர் வெளிநாடு சென்று மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் கிண்ணியா குறிச்சாங்கேணி பிரதேசத்தில் தனது தாயின் வீட்டில் வசித்து வந்த என்.றிஸ்மியா (வயது-20) என்பவர் அதே பிரதேசத்தில் பிரிதொரு நபருடன் ஏற்பட்ட தகாத உறவினால் கருவுற்ற நிலையில் குறித்த கருவினை கலைப்பதற்காக பல முயற்சிகள் செய்து வந்த நிலையில் குறித்த கரு ஆறு மாத காலம் அடைந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தனது தாயின் வீட்டில் குறித்த சிசுவை பிரசவித்துள்ளார்.
பின்னர் குறித்த சிசுவை பழைய துணிகளால் சுற்றி ஒரு பையினுள் வைத்து தனது கணவரின் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும் மூன்று நாட்களின் பின்னர் குறித்த வீட்டில் துர்நாற்றம் வீசியதை அடுத்து குறித்த பெண்ணின் கணவரின் தாயாரினால் பெண் அனுப்பிவைத்த பையினை சோதனை செய்து பார்த்தபோது துணிகளினால் சுற்றப்பட்ட நிலையில் குறித்து சிசு காணப்பட்டதாகவும் பின்னர் குடும்பத்தினர் பொலிசாருக்கு தகவல் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு பிரசவித்த சிசுவின் உடல் பாகங்கள் சிதைவடைந்து காணப்படுவதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.