அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் எரிபொருள் நிலையத்தில் தொடர்ச்சியாக முறையற்ற செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.
அதன் தொடர்ச்சியாக மிகவும் பழமை வாய்ந்த இயங்கு நிலையில் இல்லாத கார் ஒன்றினை தள்ளி சென்று எரிபொருள் பெற்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முறையற்ற எரிபொருள் வழங்கலில் குறித்த நிலையத்தின் முகாமையாளர் தொடர்ச்சியாக செயல்பட்டு வருவதுடன் தமது கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு அரசாங்க அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் எரிபொருள் வழங்குவதாக கூறி மிகைப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் வழங்குவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பண்டத்தரிப்பு எரிபொருள் நிரப்பு நிலையம்
பண்டத்தரிப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு நேற்று(31) காரில் வந்த இருவர் தம்மை வரிசையில் முன்னுக்கு விடுமாறு அங்கு நின்ற கார் சாரதி சிலரை தகாத வார்த்தைகளால் திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுகாதாரத் துறையினருக்கு அத்தியாவசிய சேவை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படுகின்ற போதும் எவ்வாறு இந்த கார் பொதுமக்களின் வரிசையில் வந்து அவர்களின் எரிபொருளையும் சுரண்ட முடியும் என மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
இருப்பினும் அவர்களை பார்க்கும்போது சுகாதாரத் துறையில் பணிபுரிபவர்கள் போன்று தெரியவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த கார் சுகாதாரத் துறை ஊழியர் ஒருவருடையதாக இருக்கலாம் என சந்தேகித்துள்ளனர்.
நாவற்குழி
நாவற்குழி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவு மக்கள் வரிசையில் காத்திருக்க, வேறு இலக்கங்களுக்கு உரிய பிரமுகர்களின் கார்களுக்கு பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளது.
நாவற்குழி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று 3,4,5 இறுதி இலக்கங்களுக்கான விநியோகம் இடம்பெற்று வந்ததுள்ளது.
மக்கள் பல மணி நேரமாக காத்திருக்க வேறு இலக்கங்களான 7,8 இலக்கமுடைய சில பிரமுகர்களின் கார்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் குழப்பமடைந்து வாய்த்தர்கத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த எரிபொருள் நிலையத்தில் பல முறைகேடுகள் இடம்பெற்று வருவதாக மக்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இது தொடர்பில் அரச அதிகாரிகள் இரகசியமான முறையில் கள ஆய்வில் ஈடுபட வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.