இந்த சலூனின் உரிமையாளரை கொல்ல பாதாள உலக கொலையாளி வந்துள்ளார். ஆனால் அதற்குள் சலூன் உரிமையாளர் அவரது வீட்டிற்குச் சென்றுவிட்டார். அங்கு முடிவெட்டும் பணியாளரான 22 வயது இளைஞனை சுட்டுக் கொன்றுள்ளனர்.
அந்த இளைஞனை சலூனின் உரிமையாளர் என நினைத்த கொலையாளி, அவரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடியுள்ளார்.
தற்போது இந்தியாவில் தலைமறைவாகியுள்ள கணேமுல்ல சஞ்சீவ என்ற பாதாள உலகக் குழுத் தலைவரின் உத்தரவில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் கம்பஹா நீதிமன்றத்திற்கு முன்பாக சுட்டுக்கொல்லப்பட்ட பஸ் பொட்டா என்ற பாதாள உலக குண்டர் கணேமுல்ல சஞ்சீவவின் நெருங்கிய கூட்டாளியாவார்.
டுபாயில் பதுங்கியிருக்கும் பத்ம என்ற பாதாள உலக தலைவரின் உத்தரவின் பேரில் பஸ் பொட்டா கொல்லப்பட்டார்.
பஸ் பொட்டாவின் கொலைக்கு பழிக்கு பழிவாங்க, பத்மவின் நெருங்கிய உறவினரைக் கொல்ல வேண்டுமென கணேமுல்ல சஞ்சீவ திட்டமிட்டுள்ளார். இதற்கான இலக்காக பத்மவின் மாமாவின் மகன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற சலூனின் உரிமையாளர்.
ஆனால் கொலையாளி செய்த தவறால் பத்மவின் சகோதரனுக்கு பதிலாக அங்கிருந்த ஊழியரே கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலை செய்யப்பட்ட 22 வயதுடையவர் எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடாத அப்பாவி இளைஞர் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கம்பஹா, அஸ்கிரிய மல்வத்தை வீதியில் வசிக்கும் பொம்புவல தேவகே அச்சிர நெத் ருவன் பொம்புவல என்ற 22 வயதுடைய திருமணமாகாத இளைஞன், T56 துப்பாக்கியால் சுடப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயங்களுக்குள்ளான இவர் கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
விசாரணை நடத்திய பொலிசாரின் கூற்றுப்படி, துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அங்கிருந்து சிறிது தூரம் நடந்து சென்று மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டார். துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் பல டி-56 துப்பாக்கியின் வெற்றுக் கோதுகள் காணப்பட்டன.
உயிரிழந்தவரின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை நேற்று முன்தினம் (06) பிற்பகல் கம்பஹா பதில் நீதவான் இந்திராணி அத்தநாயக்கவினால் மேற்கொள்ளப்பட்டது.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இடத்தை அவதானித்த பின்னர், கம்பஹா பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் புதைக்கப்பட்டிருந்த சடலத்தை அவதானித்த பதில் நீதவான், மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனையை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
மேலும் நீதிமன்ற விசாரணை வரும் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.