ஊசி மூலம் போதைப் பொருள் பயன்படுத்துவோர் உயிர் பிழைப்பதும் அரிது...

ஊசி மூலம் போதைப் பொருளை பயன்படுத்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நபர்களை காப்பாற்றுவதற்கு லட்சம் ரூபாய்கள் செலவு செய்ய வேண்டியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஊசி மூலம் போதைப் பொருளை ஏற்றிய மூவர் அண்மையில் உயிரிழந்த நிலையில் ஒருவரை வைத்தியர்கள் நீண்ட நாள் போராட்டத்தின் பின் காப்பாற்றியுள்ளனர். 

ஊசி மூலம் ஹரோயின்போதைப் பொருளை ஒருவர் பாவித்த ஊசியை இன்னொருவர் இரத்த நாளத்தினூடாக ஏற்றுவதால் அதிகளவு கிருமி தொற்று ஏற்படுகின்றது. 

இவ்வாறு பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு லட்சம் ரூபாய்களை செலவு செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது. 

ஏனெனில் இரத்த நாளத்தின் ஊடாக போதைப்பொருள் உடலினுள் செல்லும்போது இருதயம் மற்றும் நுரையீரல் பகுதிகளின் கிருமித் தொற்று ஏற்படுகின்றது. 

இவ்வாறு சிகிச்சை பெறுபவர்களில் பெரும்பாலானவர்கள் உயிர் பிழைப்பது அரிதாக காணப்படுகின்ற நிலையில் காப்பாற்றப்படுபவர்கள் மீண்டும் அதே பழக்கத்தில் ஈடுபடுவது மன வருத்தத்தை தருகிறது.

ஆகவே எதிர்கால சமுதாயத்தின் நலன் கருதி போதை அற்ற சமூகத்தை உருவாக்குவதற்கு அனைவரும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad