இந்தியாவின் சர்ச்சைக்குரிய பிரபல சாமியார் நித்தியானந்தா இலங்கையிடம் மருத்துவ உதவி கோரி அடைக்கலம் கேட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நித்தியானந்தா தனித்தீவு ஒன்றை வாங்கி அதனை தனிநாடாக அறிவித்திருந்தார்.
இந்தத் தீவானது ஈக்வடார் நாட்டில் இருப்பதாக தகவல் வெளியானாலும் அதை அந்நாட்டு அரசாங்கம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
இந்தத் தீவுக்கு கைலாசா என பெயரிட்ட நித்தியானந்தா நாட்டுக்கென்று தனி நாணயம், விசா என்பவற்றையும் உருவாக்கியுள்ளதாக அவ்வப்போது காணொலி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.
இந்த நிலையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி மருத்துவ சிகிச்சை பெற இலங்கையில் அடைக்கலம் தரும்படி ஜனாதிபதி ரணிலிடம் கோரிக்கை முன்வைத்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில்
“தமக்கு உடல்நலம் சரியில்லை. எனவே அவசரமாக மருத்துவ உதவி தேவைப்படுகிறது. சிகிச்சைக்கான செலவு மற்றும் அனைத்து மருந்துகளுக்குமான செலவு ஆகியவைகளை தனது சொர்க்க பூமியான கைலாசம் ஏற்றுக்கொள்ளும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நித்தியானந்தாவுக்கு உடல்நலம் சரியில்லை என்றும், அவர் சமாதி நிலையை அடைந்துவிட்டார் எனவும் முன்பு தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் சில நாள்களிலேயே தனக்கு ஒன்றும் இல்லை. திரும்பவும் வந்துவிட்டேன் என நித்தியானந்தா தன் கைப்பட எழுதி அதன் ஒளிப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.