தியாகி திலீபனின் நினைவிடத்தில் இன்று குழப்பம் ஏற்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும், மணிவண்ணன் அணியினருக்குமிடையில் நீடித்த குழப்பம் இன்று நினைவு நிகழ்வில் குழப்பமாக வெடித்தது. கடந்த சில வருடங்களாக நினைவு நிகழ்விற்கு பாதுகாப்பு தரப்பினர் இடையூறு ஏற்படுத்தி வந்தனர். இம்முறை பாதுகாப்பு தரப்பினர் இடையூறை ஏற்படுத்தாத போதும், தமிழர் தரப்புக்கள் தமக்குள் மோதி நினைவு நிகழ்விற்கு குந்தகம் ஏற்படுத்தின.
தியாகி திலீபன் நினைவு இன்று ஆரம்பிக்கவுள்ள நிலையில், இதன் ஏற்பாட்டை யார் செய்வது என்பதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும், மணிவண்ணன் அணிக்குமிடையில் கடந்த 2 நாட்களாக முறுகல் நீடித்து வந்தது.
ஒரே இடத்தில் இரண்டு தரப்புக்களும் வெவ்வேறு அஞ்சலி நிகழ்வுகளை ஏற்பாடு செய்தன.
மணிவண்ணன் தரப்பு திலீபன் தூபியை சுத்தம் செய்து, அருகில் உருவப்படம் வைத்த போது, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அதற்கு முன்பாக பந்தல் அமைத்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரு தரப்பையும் சமரசம் செய்யும் பேச்சுக்கள் நடந்தன. விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் பசீர் காக்கா உள்ளிட்டவர்கள் இரு தரப்புடனும் பேசி, பொதுவான நினைவு நிகழ்விற்கு ஏற்பாடு செய்தனர்.
எனினும், இரு தரப்பிற்குள்ளும் குழப்பம் நீடித்தது.
தியாகி திலீபனின் உருவப்படத்தை திரைநீக்கம் செய்ய மணிவண்ணன் தரப்பு ஏற்பாடு செய்திருந்தது. எனினும், உருவப்படம் திரைநீக்கம் தேவையற்றது என இரவோடு இரவாக முன்னணியினர் அந்த ஏற்பாடுகளை அகற்றி விட்டனர்.
அத்துடன், மணி வண்ணன் தரப்பினர் வைத்த படததிற்கு முன்பாக கொடி நாட்டினர்.
இன்று நிகழ்வு ஆரம்பிக்கும் தருணத்தில், அந்த கொடிகளை அகற்றும்படி பல்வேறு தரப்பினரும் அழுத்தம் கொடுத்த பின்னர், முன்னணியினர் அதை அகற்றினர்.
இன்றைய நிகழ்வை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் தொகுத்து வழங்கினார்.
அவர் வழக்கம் போல, ஒட்டுக்குழுக்கள், துரோகிகள், 13வது திருத்தத்தை ஆதரிப்பவர்கள் பற்றி பேசினார்.
அப்போது, பசீர் காக்கா சென்று, நினைவஞ்சலியை குழப்பும் விதமாக பேச வேண்டாம், அரசியல் மேடையல்ல இது, அரசியல் பேசுவதெனில் தனியாக மேடையமைத்து பேசுங்கள் என்றார்.
இதையடுத்து, முன்னணியினர் பசீர் காக்காவுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
நினைவு நிகழ்வை குழப்புகிறார்கள் என கண்ணீர் விட்டபடி பசீர் காக்கா அங்கிருந்து ஒதுங்கி வந்தார்.
மீண்டும் சுகாஷ் மைக் பிடித்து, தனது பழைய கருத்துக்களை வலியுறுத்தினார்.
பசீர் காக்கா மீண்டும் சென்று அதை தவிர்க்குமாறு கேட்டார். மீண்டும் தர்க்கம் ஏற்பட்டது. பின்னர் பசீர் காக்கா ஒதுங்கிச் சென்று விட்டார்.
அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட ஒருவர் முன்னணியினரை கண்டித்த போது, அவரை ஈ.பி.டி.பி என, முன்னணியினர் சத்தமிட்டனர். அவர் கோபமடைந்து, இதேயிடத்தில் 12 நாட்களும் தான் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும், முன்னணியினர் யாராவது தயாரா என சவால் விடுத்தார்.