இந்த பதிவினை ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பாக கருத்தில் கொள்ளவும். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலமும் இதில் தங்கியுள்ளது. அனைவருக்கும் இந்த பதிவு சென்றடைய பகிருங்கள்.
ஐஸ் மற்றும் ஹெரோயின் போன்ற உயிர்க்கொல்லி போதைப்பொருள் பாவனை யாழ்ப்பாணத்தில் திடீரென அதிகரித்துள்ளது. அவை பெரும்பாலும் 18 வயது தொடக்கம் 23 வயதுக்கு இடைப்பட்டவர்களிடமே அதிகமாக காணப்படுகிறது.
இவ்வாறான போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் சிறிய வகை ஊசிகள் மூலம் தமது இரத்த நாளங்களின் ஊடாக போதைப்பொருளை உட்செலுத்தி கொள்கின்றனர்.
இவ்வாறு ஊசி மூலம் போதைப்பொருளை உட்செலுத்துவதனால் கிருமி தொற்றுக்கள் ஏற்படுவதன் ஊடாகவும் , அதிகளவான போதைப்பொருள் உட்செலுத்தப்படுவதாலும் மரணங்கள் சம்பவிக்கின்றன.
ஒருவர் பாவித்த ஊசியினை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சுழற்சி முறையில் பாவிக்கின்றனர். அது மட்டுமின்றி நீண்ட நாட்களாக உரிய பராமரிப்புகள் இன்றி ஒரே ஊசியினை பலரும் சுழற்சி முறையில் பாவிப்பதனால் கிருமி தொற்றுக்கள் ஏற்படுகின்றன.
கிருமிகள் ஊசி மூலம் இரத்த நாளங்கள் ஊடாக இரத்தங்களில் கலந்து நுரையீரல், இருதயம் உள்ளட்டவற்றை தாக்குகின்ற. அதனால் அவை செயல் இழந்து மரணங்கள் சம்பவிக்கின்றன.
இவ்வாறு கிருமி தொற்றுக்கு உள்ளாகி இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதாகவும் , மேலும் ஒருவர் வைத்தியர்கள் குழு ஒன்றின் தீவிர முயற்சியினால் காப்பாற்றப்பட்டு உள்ளதாகவும் , இவ்வாறு நுரையீரல் , இருதயம் போன்றவற்றில் கிருமி தொற்று ஏற்பட்டால் அதற்கு உயர் தொழிநுட்பங்களை பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதனால் மில்லியன் ரூபாய்களுக்கு அதிகமாக செலவழிக்க வேண்டிய நிலைமை காணப்படுவதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்து இருந்தார்.
அதேபோன்று மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் போதைப்பொருளை பாவித்த மேலும் 8 பேர் கடந்த சில மாதங்களில் உயிரிழந்துள்ளார்.
அதேவேளை போதைக்காக ஓடிக்கோலோனை குடித்து வந்தவர் அண்மையில் இருதய நோயினால் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் கிருமி தொற்றினால் ஈரல் அலர்ச்சி உள்ளிட்ட நோய்களினால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கின்றன.
அதேவேளை போதைப்பொருள் பாவனையால் போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்க யாழ்.போதனா வைத்தியசாலையில் திறக்கப்பட்ட சிகிச்சை நிலையத்தில் கடந்த கடந்த இரண்டு மாதங்களில் 134 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் போதைப்பொருள் பாவனையில் இருந்து மீள்வதற்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு வாராந்தம் சராசரியாக 30 பேர் சிகிச்சைக்கு வருவதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பாலியல் துஸ்பிரயோகங்கள் , வன்புணர்வுகள்.
போதைப்பொருள் பாவனை அதிகரிப்பினால் பாலியல் துஸ்பிரயோகங்களும் அதிகரித்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான சகோதரன் தனது சொந்த சகோதரியையே வன்புணர்வுக்கு உட்படுத்தியமையால் , மனமுடைந்து, விரக்திக்கு உள்ளான சகோதரி தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.
அதேவேளை கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் போதைக்கு அடிமையான 25 வயதிற்கும் 27 வயதிற்கும் இடைப்பட்ட மூன்று இளைஞர்கள் இணைந்து 15 வயது சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளனர்.
அதேபோன்று 07 வயது சிறுமி ஒருவரை 15 வயதேயான போதைக்கு அடிமையான சிறுவன் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளான்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போதைக்கு அடிமையான இளைஞன் ஒருவர் அயலில் உள்ள பெண்களுடன் தகாத முறையில் நடக்க முயற்சித்து வந்த நிலையில் தனது சொந்த அண்ணனின் மனைவியுடன் (அண்ணி) தகாத முறையில் நடக்க முற்பட்டுள்ளான்.
அதேவேளை கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போதைக்கு அடிமையான 17 வயதான சிறுமி ஒருவர் போதைப்பொருட்களை வாங்குவதற்காக பாலியல் துர்நடத்தைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் 08 மாத கர்ப்பமாக உள்ள நிலையில் மீட்கப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
காரைநகர் கடற்கரை பகுதியில் போதையில் நின்ற இளைஞர் குழுவொன்று சுற்றுலாவிற்கு வந்த ஸ்பெயின் நாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு , ஊர்காவற்துறை நீதிமன்றம் 09 இளைஞர்கள் குற்றவாளிகளாக கண்டு அவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் தண்டமும் விதித்துள்ளதுடன் , பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
இவை கடந்த ஒரு சில வாரங்களுக்குள் இடம்பெற்று, ஊடகங்களில் வெளியான செய்திகள் மூலம் வெளிவந்தவை ஆகும். வெளிவராத செய்திகளும் உண்டு.
ஹெரோயின் போதைக்கு அடிமையான 5 பெண்களுக்கு சிகிச்சை.
போதைப்பொருள் பாவனை பெண்கள் மத்தியிலும் காணப்படுகின்றன. கடந்த ஆண்டு 10 பெண்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர். மயூரப்பிரியன்
இந்த ஆண்டு ஒன்றரை மாத கைக்குழந்தையுடன் தாய் ஒருவர் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்கள் போதைப்பொருள் பாவித்தமை , உடைமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள்.
கடந்த மாதம் யாழ்ப்பாண புறநகர் பகுதி ஒன்றில் உள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றினுள் இருந்து இரு பெண்கள் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த வேளை யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
இந்த வருடத்தில் 05 பெண்கள் போதைக்கு அடிமையானவர்கள் என இனம் காணப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் சட்ட வைத்திய அதிகாரி ஊடாக யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
அதேவேளை தாய் ஒருவரே தனது 11 வயதே ஆனா மகளை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுத்தி வந்தமை கண்டறியப்பட்டு , தற்போது சிறுமி மீட்கப்பட்டு , நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவர் காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியின் தந்தை போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் , தாயார் சிறுமி மூலம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
பொலிஸாரின் ஒத்துழைப்பு போதவில்லை.
தெற்கில் இருந்தே ஹெரோயின் , ஐஸ் போன்ற போதைப்பொருட்கள் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்படுகின்றன.
தெற்கில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும் உட்பிரவேசிப்பதற்கு இரண்டு தரை வழிப்பாதைகளே காணப்படுகின்றன.
ஒன்று யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலை மூலம் ஆனையிறவு ஊடாக மற்றையது யாழ்ப்பாணம் – மன்னார் நெடுஞ்சாலை மூலம் சங்குப்பிட்டி ஊடாக.
ஆனையிறவு மற்றும் சங்குப்பிட்டி பகுதிகளில் இராணுவ மற்றும் பொலிஸ் சோதனை சாவடிகள் காணப்படுகின்றன. அவற்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணிக்கும் வாகனங்கள் பரிசோதிக்கப்படும் நடைமுறை இன்றும் உள்ளன. அவற்றினை தாண்டியே யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கொண்டு வரப்படுகின்றன.
அவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்படும் போதைப்பொருள் யாழ்ப்பாணத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முகவர்கள் ஊடாக யாழ்ப்பாணத்தின் சகல பகுதிகளுக்கும் விநியோகிக்கப்படுகின்றன.
யாழ்ப்பாணத்தில் சுமார் 20 கிராமங்கள் போதைப்பொருள் பாவனை , விற்பனை ஆகிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. குறித்த கிராமங்களில் இளைஞர்கள் , மாணவர்கள் என வயது வித்தியாசம் இன்றி போதைப் பொருட்களை நுகர்பவர்களாகவும் , விற்பனை செய்பவர்களாகவும் காணப்படுகின்றனர்.
பாடசாலை மாணவர்கள் , தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்லும் மாணவர்களே பெரும்பாலான போதைப்பொருள் முகவர்களின் இலக்காக உள்ளனர். மாணவர்களை இலக்கு வைத்தே வியாபாரம் மேற்கொள்ளப்படுகின்றது.
நாள் ஒன்றுக்கு 30 மில்லிகிராம் தொடக்கம் 300 மில்லிகிராம் வரையில் ஒருவர் நுகர்கின்றார். இந்த அளவை போதைப்பொருள் வியாபாரிகள் , பாவிப்போர் ” முள்” என கூறுவார்கள். போதைப்பொருளை அவர்கள் “முள்” எனும் அளவீட்டில் தான் கூறுவார்கள். அதாவது கைவிரல் நக கண்ணுக்குள் வைக்க கூடிய அளவு அல்லது ஒரு தீக்குச்சி ஒன்றின் மருந்தின் அளவு போதைப்பொருளை ஒருவர் நுகர்கின்றார்.
யாழ்ப்பாண நகர் பகுதிக்கு அண்மையில் யாழ்ப்பாணம் கோட்டை சுற்று வட்ட பகுதி , பண்ணை கடற்கரை பகுதி , கோட்டை முனீஸ்வரன் ஆலய சூழல் உள்ளிட்ட பகுதிகளில் போதை நுகர்வோர் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதாக கூறப்படுகின்றது.
குறித்த பகுதிகளின் 500 மீட்டர் சுற்று வட்ட பகுதிக்குள்ளையே யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையம் அமைந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் யாழ்.போதனா வைத்திய சாலை ஆகியவற்றில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல்களில் கூறப்பட்ட சில கருத்துக்களின் பின்னர் போதைப்பொருள் பாவனை இடங்களாக அடையாளம் காணப்பட்ட சில இடங்களை மையப்படுத்தி பொலிஸார் சுற்றுக்காவல் நடவடிக்கைளில் இறங்கியுள்ளனர்.
போதைப்பொருள் விநியோகிக்கும் முக்கியஸ்தர்களை கைது செய்வதற்கு அல்லது போதைப்பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் தீவிர நடவடிக்கைகளில் இறங்குவதில்லை எனும் குற்றச்சாட்டு பலர் மத்தியில் காணப்படுகின்றன.
திருட்டுக்கள் அதிகரிப்பு.
போதைக்கு அடிமையானவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1000 ரூபாய் தொடக்கம் 5ஆயிரம் ரூபாய் வரையில் தேவைப்படுகின்றன. ஆரம்பத்தில் வீட்டில் பொய் சொல்லி ஏதோ காரணம் கூறி வீட்டில் பெற்றுக்கொண்டாலும் , வீட்டார் சுதாகரித்துக்கொண்டு எதற்கு பணம் என வினாவி பணம் கொடுப்பதனை நிறுத்தும் போது வீடுகளில் சிறு சிறு திருட்டுக்களில் ஈடுபடுகின்றனர்.
வீடுகளில் பணமாகவோ அல்லது பொருட்களை திருடி விற்பவர்கள் பின்னர் சகோதரர்களின் உடமைகளை திருடி விற்க தொடங்கும் போது வீடுகளில் சச்சரவுகள் சண்டைகள் ஏற்படுகின்றன.
இறுதியில் அவர்கள் அயலவர்களின் வீடுகளிலும் சிறு சிறு திருட்டுக்களில் ஈடுபட தொடங்கி விடுவார்கள். குடும்ப கெளரவம் , சிறு பொருட்களே திருடப்படுவதனால் பொலிஸ் நிலையங்களுக்கு சென்று முறைப்பாடு செய்வதற்கு விருப்பம் இன்மை போன்ற காரணங்களால் இவ்வாறான திருட்டுகள் வெளிவருவதில்லை.
ஒரு கட்டத்தில் பொறுமை இழக்கும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை தாமே பொலிஸ் நிலையம் , யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை ஆகியவற்றில் , “எவ்வளவு காலம் வேணும் என்றாலும் நீங்களே வைத்திருங்கோ .. ” என கூறி தமது பிள்ளைகளை ஒப்படைத்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இவ்வாறு பெற்றோர்களால் ஒப்படைக்கப்படும் மாணவர்கள் , இளைஞர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் கந்தக்காடு புனர்வாழ்வு முகாம் உள்ளிட்ட புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
போதை அரக்கனின் கோர பிடியில் ..
யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை மாணவன் ஒருவன் ஹெரோயின் போதைப்பொருளுடன் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளான்.
அதேபோல நகர் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றுக்கு மேலதிக வகுப்புக்காக வந்த 4 மாணவர்கள் மதுபானம் மற்றும் “மாவா” எனும் போதைப்பாக்குடன் கைது செய்யப்பட்டு , பெற்றோரை வரவழைத்து கடுமையாக எச்சரிக்கப்பட்டு , பெற்றோர்களிடம் மாணவர்களை பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவில் பாடசாலைக்கு நிஜாம் பாக்குகளை கொண்டு சென்ற மாணவனை பொலிஸார் பிடித்து கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர்.
அதேவேளை “பாடசாலைகளில் போதைப் பொருள் பாவனையில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்பான விடயங்களை பாடசாலையின் நற்பெயர் கெட்டுவிடும் என்பதற்காகவே மறைக்கப்படுவதாகவும் , அவ்வாறு மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையை மறைக்கும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
மாணவர்களே இலக்கு
போதைப்பொருள் வியாபாரம் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு உட்படுத்துதல் என்பன பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்தே நடத்தப்படுகின்றன.
குறிப்பாக பெற்றோரை இழந்த பிள்ளைகள் , வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்ற பெற்றோர்களின் பிள்ளைகள் , தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்லும் மாணவர்கள் என்போரை இலக்கு வைத்தே போதைப்பொருள் பழக்கப்படுத்தப்படுகிறது.
போதைப்பொருள் விற்பனை முகவர்கள் முன்னதாக போதைப்பொருளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி அவற்றை பழக்கப்படுத்தி அவர்கள் போதைக்கு அடிமையான பின்னர் , அவர்களுக்கு போதைப்பொருளுக்கான பணத்திற்காக அவர்களையே போதைப்பொருள் வியாபாரிகளாக மாற்றுகின்றார்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை யாழ்.மாவட்டத்தில் பாடசாலைகளில் இருந்து இடை விலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
“போதையுடன் தொடர்புடைய குற்றங்களில் நாளாந்தம் அடையாளப்படுத்தப்படும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை நாளைய பிரளயத்தை கட்டியம் கூறி நிற்கின்றது.
இது நாம் விரைந்து செயற்படவேண்டிய தருணம்.போதைப்பொருள் பாவனைக்கு எதிரான பரந்துபட்ட கட்டமைப்பை உருவாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்துவது எமது அனைவரினதும் கடமையாகும்” என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மருந்து விற்பனை பிரதிநிதிகள் கண்காணிக்கப்பட வேண்டும்.
போதைப்பொருள் என அடையாளம் காணப்பட்டவற்றை நுகர்ந்து போதையை ஏற்றிக்கொள்வோர் , பின் நாட்களில் அவற்றில் இருந்து வெளிவர முடியாத நிலையில் , பொருளாதார நெருக்கடி காரணமாகவும் , போதைப்பொருளை தொடர்ச்சியாக பெற்றுக்கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்குவதாலும் , போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்கின்றனர்.
சில குறிப்பிட்ட வலி நிவாரணி மாத்திரைகளை அதிகளவில் உட்கொள்ளும் போது அவை ஒரு வித போதையை கொடுக்கின்றது. அவற்றை அதிகளவில் (அதிக டோஸ்) எடுத்துக்கொள்வது சிலவேளைகளில் மரணங்களை கூட ஏற்படுத்தி விடும். அதேவேளை தொடர்ச்சியாக அந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் , நரம்பு தளர்ச்சி , உடல் சோர்வு , சிறுநீரக பாதிப்புக்கள் , உயர் குருதி அழுத்தம் உள்ளிட்டவை ஏற்படவும் வாய்ப்புண்டு.
இவ்வாறான வலி நிவாரணி மாத்திரைகளை வைத்தியர்களின் சிபாரிசு இல்லாமல் (டொக்கரின் துண்டு) மருந்தகங்களில் பெற்றுக்கொள்ள முடியாது.
அதனால் மருந்து விற்பனை பிரதிநிதிகள் அவ்வாறான மாத்திரைகளை கறுப்பு சந்தைகளில் அதிகளவில் விற்பனை செய்கின்றனர். அவர்களின் உடமைகளில் மாத்திரைகள் காணப்பட்டாலும் அவை சந்தேகப்படும் படியாக இருக்காதமையால் , தமது தொழிலை கவசமாக பயன்படுத்தி மாத்திரை விற்பனையில் ஈடுபடுகின்றனர்.
இவர்களை கண்காணித்து பொலிஸார் கைது செய்வதில் பெரும் சிரமங்கள் காணப்படுவதனால் இவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக்கொள்கின்றனர்.
செல்போன் போதை.
ரிக் ரொக்” மற்றும் “ஒன்லைன் கேம்” ஆகியவற்றுக்கு அடிமையாகி , அதில் இருந்து மீள்வதற்கு உளவள சிகிச்சைக்கு கடந்த 09 மாதங்களில் 16 பாடசாலை மாணவர்கள் சிகிச்சை பெற வந்துள்ளனர் யாழ்.போதனா வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தரம் 09ஆம் வகுப்பு மேற்பட்ட 97 வீதமான மாணவர்கள் சொந்தமாக தொலைபேசிகள் வைத்திருப்பவர்களாகவோ , பெற்றோரின் தொலைபேசிகளை அதிகம் பாவிப்பவர்களாகவோ உள்ளனர்.
குறிப்பாக 12 வயது தொடக்கம் 17 வயது வரையிலான மாணவர்கள் பெரும்பாலும் இணைய விளையாட்டுக்களில் (ஒன்லைன் கேம்) ஈடுபடுபவர்களாக உள்ளனர்.
இந்த நிலையில் இந்த வருடம் இணைய விளையாட்டு காரணமாக இரு மாணவர்கள் தவறான முடிவெடுத்து தமது உயிரை மாய்த்துள்ளார்.
ஒருவர் விளையாட்டில் தோல்வியுற்றமையால் அவரது நண்பர்கள் கிண்டல் அடித்தமையால் , உயிரை மாய்த்துள்ளார். மற்றைய மாணவன் இணைய விளையாட்டு விளையாடுவதனை தாய் கண்டித்ததால் உயிரை மாய்த்துள்ளார்.
தனியே சிகிச்சை அளிப்பதுடன் மாத்திரம் கட்டுப்படுத்த முடியாது.
“போதைப்பொருள் பாவனையை தடுத்தல் என்பது தனியே போதைப்பொருள் பாவனையாளர்களை இனங்கண்டு சிகிச்சை அளிப்பதுடன் முடிந்து விடுவதில்லை.
போதைப்பொருள் நுகர்வோரை இனங்காணுதல், அவர்களுக்கு சிகிச்சை அளித்தல், அவர்கள் மீண்டும் தமது பழைய வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதிசெய்தல், மீளவும் போதைப் பழக்கத்துக்குற்படாத வகையிலான அகப்புறச் சூழ்நிலைகளை உருவாக்குதல் மற்றும் தொடர் கண்காணிப்பு வலையமைப்பை ஏற்படுத்துதல் உள்ளடங்கலான ஓர் பல்பரிமாணப் பொறிமுறையாகும்.
இப் பொறிமுறைகளை உருவாக்கி வெற்றிகரமாகச் செயற்படுத்துவதன் மூலம் மாத்திரமே போதைப்பொருள் பாவனைக்கு எதிரான நிலைபேறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும்” என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
யாழில் விழிப்புணர்வு பேரணி.
போதை பாவனை அதிகரித்து செல்வதனால் விழிப்புணர்வை ஏற்படுத்தி யாழ்.போதனா வைத்திய சாலை சமூகம் யாழ்.போதனா வைத்திய சாலையில் இருந்து மாவட்ட செயலகம் வரையில் நடை பவனியாக சென்று மாவட்ட செயலரிடம் ஐந்தம்ச கோரிக்கை அடங்கிய மகஜரையும் கையளித்துள்ளனர்.
அதில் குறிப்பிட்டு இருந்தவையாவன ,
1. போதைப்பொருள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முப்படைகளையும் உடனடியாக வலியுறுத்துதல்.
2.போதைப் பொருள் விநியோகம் தொடர்பான தகவல்களை வழங்குவோரை பாதுகாப்பதற்கான பொறிமுறையை உருவாக்குதல்.
3. போதைப்பொருள் சம்பந்தமான தகவல்களை தயக்கமின்றி
வழங்க அதிபர்கள் ஆசிரியர்களை ஊக்கப்படுத்துதலும், அவர்களைப் பாதுகாத்தலும்.
4. போதைப் பொருள் பாவனைக்கு எதிரான மக்கள் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து போலீசாருடன் இணைந்து போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு உதவியளித்தலும், ஊக்கப்படுத்துதலும்.
5. போதைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிப்பதற்கு உரிய கட்டமைப்புகளை உருவாக்குவதும், அதன் தொடர்ச்சியான செயற்பாடுகளை உறுதிப்படுத்தலும் என்றுள்ளது.
எனவே தொடர்ச்சியாகயாழ்ப்பாணத்தில் அதிகரித்துச் செல்லும் இந்தப் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூகத்தினர் முன்வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.