நேற்றைய தினம் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் நேற்று சீதுவ, கொட்டுகொட பகுதியில் காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 39 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் மீது துப்பாக்கிதாரி சுமார் 11 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றுக் காலை 7 மணி அளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் கஞ்சி விற்பனை செய்யும் இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அருகில் இருந்த பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் கஞ்சி விற்பனை செய்யும் இடத்தில் இருந்த பெண் ஒருவரும் காயமடைந்ததாக கூறப்பட்டது.
பின்னர், காயமடைந்த இருவரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 39 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.
39 வயதான கிஹான் காஞ்சன பெரேரா என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை எல்பிட்டிய, யக்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று (23) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த நபர் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் 26 வயதுடைய ஒருவரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.