வறுமையால் பட்டினியில் வாடிய சிறுவன் போஷாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த தகவலை அந்தப் பகுதியின் சுகாதார தரப்பினர் உறுதி செய்துள்ளனர்.
மூதூர் - 64 ஆம் கட்டை - சகாயபுரம் கிராமத்தில் உள்ள மாணிக்கவிநாயகர் ஆலயத்துக்கு பின்புறமாகவுள்ள வீதியில் குடியிருக்கும் வைரமுத்து ராமராஜன் என்ற சிறுவனே பட்டினியின் கொடுமையால் உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் தந்தையை இழந்து தாயுடன் வாழ்ந்து வந்தார்.
இது தொடர்பான தகவல்களை மூதூர், பாரதிபுரம் - கிளிவெட்டியில் உள்ள மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் சமூக ஊடகங்கள் ஊடாக வெளியிட்டுள்ளனர்.
"சிறுவனின் தற்காலிக வீட்டில் உள்ளேயும் வெளியேயும் மழை வெள்ள நீர் தேங்கி நின்றது. இனிமேலாவது பட்டினியில் இருக்கின்ற சிறுவர்களைப் பாதுகாக்க அரச மற்றும் அரச சார்பற்ற அதிகாரிகள் விரைந்து செயற்பட வேண்டும்.
சகாயபுரம் கிராமம் போன்று பல கிராமங்களில் வறுமையின் கோரப் பிடியில் சிக்கி பெருமளவு மக்கள் கவனிப்பாரற்று உள்ளனர். அதிகாரிகள் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்" என்று மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கம் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.