இளம் பெண் சோபனா விபத்தில் மரணம்.

தமிழகத்தில் வீதியில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து இலங்கை யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த செல்வகுமார் குடும்பத்தினர் போரூர் லட்சுமி நகரில் வசித்து வருகிறார்கள். மகள் ஷோபனா (23) கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியியலாளராக பணிபுரிந்து வந்தார்.

இவரது தம்பி ஹரீஸ். முகப்பேரில் உள்ள தனியார் பாடசாலையில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று காலை 7.30 மணியளவில் ஷோபனா, தனது தம்பியை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அவர்கள் நொளம்பூர் அருகே மதுரவாயல் பைபாஸ் சாலை, சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

சர்வீஸ் சாலை குண்டும் குழியுமாக இருந்தது. இந்த நிலையில் சாலையில் இருந்த பள்ளத்தில் ஏறி இறங்கிய போது நிலை தடுமாறிய ஷோபனாவின் மோட்டார் சைக்கிள் அருகில் சென்ற வேன் மீது உரசியது. இதில் அவர் தம்பியுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளோடு சாலையில் விழுந்தார்.

அந்த நேரத்தில் பின்னால் வேகமாக வந்த மணல் லொறியின் சக்கரத்தில் ஷோபனா சிக்கிக்கொண்டார். இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ஷோபனா பரிதாபமாக இறந்தார்.

மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்தபோது எதிர்ப்புறம் விழுந்ததால் ஷோபனாவின் தம்பி ஹரீஸ் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

அவர் பலியான அக்காவின் உடலை கண்டு கதறி துடித்தது பரிதாபமாக இருந்தது.

விபத்து நடந்ததும் லொறியை நிறுத்திவிட்டு சாரதி தப்பி ஓடிவிட்டார்.

தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் பலியான ஷோபனாவின் உடலை மீட்டு பரிசோதனைக்காக போரூரில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சாரதியை தேடி வருகின்றனர்.

மாணவர் ஹரீஸ் நீட் தேர்வுக்காக பாடசாலையிலேயே நடக்கும் சிறப்பு வகுப்பில் படித்து வருகிறார். நேற்று காலை பாடசாலைக்கு செல்ல தாமதமானதால் அவர் அக்கா ஷோபனாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். குண்டும் குழியுமான சாலை ஷோபனாவின் உயிரை காவு வாங்கிவிட்டது.

மதுரவாயல் சர்வீஸ் சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதாகவும், இதனால் அடிக்கடி விபத்து நடப்பதாகவும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். நேற்றைய விபத்தை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சாலையில் பள்ளங்களை மணல், சல்லிகள் கொட்டி சீரமைக்கப்பட்டது.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad