யாழில் பேஸ்புக் காதலன் ஏமாற்றியதால் உயிரை மாய்த்த யுவதியின் குடும்பத்தினர், பேஸ்புக் காதலன் மீது சட்டநடவடிக்கையெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ் மாநகரை அண்டிய பகுதியை சேர்ந்த யுவதியொருவர் சில வாரங்களின் முன்னர் உயிரை மாய்த்திருந்தார். வீட்டில் யாருமில்லாத சமயத்தில், படுக்கையறைக்குள் தூக்கில் நொங்கி உயிரை மாய்த்தவர், பின்னர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
அவர் காதல் தோல்வியால் மன உளைச்சலிற்குள்ளாகியிருந்ததால் தற்கொலை செய்ததாக கருதப்படுகிறது.
அவரது மரணத்திற்கு பேஸ்புக் காதலன்தான் காரணமென குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
மட்டக்களப்பை சேர்ந்த இளைஞன் ஒருவருடன் பேஸ்புக் வழியாக உறவு ஏற்பட்டு, பின்னர் இருவரும் காதலர்களாக மாறினர். யாழ் நகரையண்டிய பகுதிகளில் சில ஆதனங்களும் குடும்த்தினருக்கு சொந்தமாக காணப்பட்டன.
யுவதியின் வற்புறுத்தலின் பேரில் ஆதனமொன்றை விற்பனை செய்து, காதலனிற்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. அந்த பணத்தில் காதலன் வெளிநாடு செல்வதாக குறிப்பிட்டு, மலேசியாவில் தங்கியிருந்துள்ளார்.
மலேசியா சென்ற சில மாதங்களின் பின்னர் யுவதியுடனான தொடர்பை, பேஸ்புக் காதலன் நிறுத்திக் கொண்டுள்ளார்.
இதையடுத்து யுவதி தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து, பேஸ்புக் காதலனிற்கு எதிராக, யுவதியின் குடும்பத்தினர் சட்ட நடவடிக்கையெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாரத்தில் இளைஞனிற்கு எதிராக வழக்கு தொடரப்படுமென குடும்பத்தினர் தெரிவித்தனர்.