யாழில் கொள்ளையடிக்கும் உணவகங்கள். அதிகாரிகள் தூங்குகின்றார்களா?

 சமையல் எரிவாயு சிலின்டர் விலை குறைக்கப்பட்டபோதும் யாழ்ப்பாணத்தில் உணவுப் பண்டங்களின் விலை குறையவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எரிவாயுவின் விலை உயர்வை காரணம் காட்டி, உணவுப் பண்டங்களின் விலைகளை உயர்த்திய யாழ்.மாவட்ட உணவகங்கள், எரிவாயுவின் விலை சுமார் 1500 ரூபாவால் ஒரே மாதத்தில் குறைந்த நிலையில், உணவுப் பண்டங்களின் விலைகளை குறைக்காமல் விற்பனை செய்து வருகின்றனர்.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,

யாழ்.மாவட்டத்தில் அநேகமான உணவகங்கள் எரிவாயு விலை அதிகரிப்பை காரணம் காட்டி, உணவுப் பண்டங்களின் விலைகளை திடீர் திடீரென அதிகரித்தன.

மதிய சைவ உணவு ஒரு பார்சல் அறுநூறு ரூபாய், அசைவ உணவு ஆக குறைந்தது ஆயிரம் ரூபாய், றோல் ஒன்றின் விலை நூறு ரூபாய் என பல தின்பண்டங்களின் விலைகள் சடுதியாக அதிகரித்தன.

எரிவாயு சிலிண்டரொன்றை 5 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக விற்பனை செய்தபோது உணவகங்களில் உணவுகள் அதிக வி‍லைக்கு விற்கப்பட்டது. அவ்வாறிருக்கையில், எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டபோது ஏன் தின்பண்டங்களின் விலைகளும் குறையவில்லை என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

யாழ்.நகரப் பகுதியில் அமைந்துள்ள பிரபல குளிர்பான நிலையங்களில் விற்கப்படும் றோல் ஒன்று இன்னும் 100 ரூபாயாக விற்கப்படுகிறது. அதுமட்டுமன்றி, 

திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள சில உணவகங்கள் காலை உணவுக்காக அனைவரும் விரும்பி உண்ணும் பரோட்டாவை சிறிய அளவில் மாற்றம் செய்து, ஒரு ஜோடி பரோட்டாவை அதிக விலையில் விற்பனை செய்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆகவே, யாழ்.மாவட்ட செயலகத்தில் இயங்குகின்ற மாவட்ட பாவனையாளர் அதிகாரசபை இவ்விடயம் தொடர்பில் மக்கள் நலன் சார்ந்து செயற்பட வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கையினை முன்வைக்கின்றனர்.

அத்தோடு, யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகார சபைக்கு தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு இந்த விடயம் குறித்து வினவியபோது, உணவுப் பண்டங்களை அதிகரித்த விலையில் விற்பனை செய்யும்  உணவகங்கள் தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad