அத்தனகலு ஓயாவில் நீராடச் சென்ற 20 வயது யுவதி ஒருவர் செல்பி எடுக்க முயன்ற போது வழுக்கி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காணாமல் போன யுவதி, கொழும்பு குணசிங்கபுர அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 20 வயதுடைய பாத்திமா பஸ்னா எனவும், அவர் புறக்கோட்யைில் உள்ள பாடசாலை ஒன்றில் தொண்டர் ஆசிரியையாக பணியாற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குணசிங்கபுரவில் வசிக்கும் உறவினர்களான ஒரு குழுவினர் நேற்று பிற்பகல் திஹாரியவில் உள்ள உறவினர் வீடொன்றுக்கு வந்துள்ளதாகவும், அந்த குழுவில் காணாமல் போன இந்த யுவதியும் இருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்த யுவதி உட்பட 7 பேர் அத்தனகலு ஓயாவில் நீராடச் சென்ற நிலையில் குறித்த யுவதி பாறையில் இருந்து தவறி விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தனக்கு நீச்சல் தெரியாது என்று கூறி உதவி கோரி அலறிய போதே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இன்று (3) பிற்பகல் வரை பொலிசார் அப்பகுதி மக்களுடன் இணைந்து யுவதியை தேடிய போதும், பலன் கிட்டவில்லை.
கடற்படை குழுவொன்றை வரவழைத்து யுவதியை தேடும் பணியை தொடர்வதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.