அங்குருவத்தோட்ட, உருதுதாவ பிரதேசத்தில் 4 நாட்களாக காணாமல் போயிருந்த 24 வயதான இளம் தாய் மற்றும் அவரது 11 மாத மகளின் சடலங்கள் நேற்று (21) காலை அங்குருவாதொட்டை, இரத்மல்தெனிய பகுதியில் உள்ள முட்புதரில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் அங்குருவாதொட்ட பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, இந்த தாயும் அவரது குழந்தையும் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாகவும் அங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இறந்த பெண் மற்றும் அவரது சிறிய மகள் ஆகியோரின் உடல்கள் மற்றும் முகங்கள் அடையாளம் காண முடியாத வகையில் விலங்குகளால் உண்ணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மரணமடைந்த எம். வசன குமாரி மற்றும் தஷ்மி திலன்யா ஆகியோரின் உடல்கள் வீட்டிலிருந்து சுமார் 600 மீற்றர் தொலைவில் உள்ள முட்புதரில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காணாமற்போன பெண்ணின் கணவர் கடந்த 18ஆம் திகதி இரவு அங்குருவத்தோட்ட பொலிஸில் வந்து தனது மனைவியையும் மகளையும் காணவில்லை எனவும் அன்றைய தினம் மாலை தனது மைத்துனரும் வீட்டுககு வந்து சென்றுள்ளதாகவும் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்படி, காணாமற்போன பெண்ணின் கணவரின் மைத்துனர் (மூத்த சகோதரியின் கணவர்) மற்றும் முன்னாள் இராணுவ சிப்பாய் உட்பட மேலும் ஐந்து பேரின் வாக்குமூலங்களை பொலிஸார் பதிவு செய்திருந்தனர். தாய் மற்றும் மகளின் சடலங்களை நேற்று கண்டெடுத்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மைத்துனரான குறித்த நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், குறித்த நபர் காணாமல் போயுள்ளதாக அங்குருவாதொட்ட பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உயிரிழந்த பெண் வசித்த வீட்டின் குளிர்சாதனப்பெட்டியின் கதவில் பல இரத்தக் கறைகள் காணப்படுவதாகவும், அருகில் தரையில் பல இரத்தக் கறைகள் காணப்படுவதாகவும், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மேலும் இறந்த பெண் பயன்படுத்திய டவலும் காணாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரான மைத்துனர் இந்த வீட்டிற்கு வந்து இறந்த பெண்ணின் கணவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, எத்தனை மணிக்கு வருவீர்கள் என கேட்டதாகவும், தான் வர நேரமாகும் என கூறியதும், தொலைபேசியை வைத்து விட்டார் என தெரிவித்தார்.
மேலும் தான் வீட்டில் இல்லாத நேரத்தில் மைத்துனர் வந்து, தனது மனைவிக்கு தொல்லை கொடுப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மனைவி தன்னிடம் இரண்டு முறை கூறியதாகவும் இது தொடர்பான புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தொடர் நிகழ்வுகளின் பின்னர் பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் காணாமல் போன தாயும் மகளும் வசித்த வீட்டில் 5 மணிநேரம் தங்கி விசாரணைகளை மேற்கொண்ட போதிலும் அவர்கள் தொடர்பில் எவ்வித தடயங்களும் கிடைக்கவில்லை.
பின்னர், ஹொரண பொலிஸ் மோப்ப நாய் பிரிவில் இருந்து “புருனோ” என்ற நாய் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அங்கு அந்த பெண்ணின் இரண்டு காலணி மற்றும் சீப்பை எடுத்து வைத்துவிட்டு சிறிது தூரம் சென்ற நாய் மைத்துனரின் முச்சக்கரவண்டி அருகே நின்றது. அதன்படி, மைத்துனரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அதன் பின்னரும் அவர் தலைமறைவாகி விட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று, தாய் மற்றும் மகளின் சடலங்கள் முட்புதரில் கண்டெடுக்கப்பட்டது. மகளின் சடலத்திலிருந்து 15 மீற்றர் தொலைவில் தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தாயின் உடலிலும் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதன்படி இதனை கொலையாக கருதி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், போலீசார் அருகில் உள்ள வீடுகளில் சிசிடிவி பொருத்தினர். காட்சிகளும் சோதனை செய்யப்பட்டன. அங்கு புதர் மண்டிய பகுதிக்கு சிவப்பு நிற முச்சக்கர வண்டி ஒன்று வந்து கொண்டிருந்த காட்சியை பொலிஸார் அவதானித்துள்ளனர். முச்சக்கரவண்டியின் பின்பகுதியில் இருந்து கால் ஒன்று வெளிப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனை ஓட்டிச் சென்றவர் அவரது மைத்துனராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மைத்துனரான குறித்த நபரை நேற்று (21) பிற்பகல் வரை கைது செய்ய முடியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, உயிரிழந்த இளம் தாய் மற்றும் உறவினர்களின் தொலைபேசி அழைப்புகளை பரிசோதிக்க நீதிமன்றில் அனுமதி கோரப்பட்டுள்ளது .