யாழ் கல்வியங்காட்டில் சிவன்கோவில் ஒழுங்கை என அழைக்கப்படும் சட்டநாதர் சிவன் கோவிலுக்கு வடக்கு பக்கமாக கோயிலுக்கு எதிர்திசையில் உள்ள ஒழுங்கையில்தான் 17 வயதான கேதீஸ்வரன் தர்மிகா வேலை செய்த வீடு உள்ளது. குறித்த வீடு அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த சபாரத்தினம் வைத்தியருக்குச் சொந்தமானது. அவர் தற்போது உயிரிழந்துவிட்டார். அவரது பிள்ளைகள், உறவினர்கள் வெளிநாட்டில் எனத் தெரியவருகின்றது. அந்த வீட்டின் பராமரிப்பாளர் சங்கிலியன் வீதியில் உள்ளார்.
குறித்த வீட்டை வாடகைக்கு கொடுத்ததும் அவரேதான். அந்த வீட்டில் யார், யார் உள்ளார்கள் அவர்கள் எந்த இடத்தைச் சொந்த இடமாகக் கொண்டவர்கள் என்பதுகூட அந்த வீட்டுக்கு அருகில் இருக்கும் அயலவர்களுக்கு தெரியாத நிலையில்தான் குறித்த வீட்டில் வாடகைக்கு இருந்துள்ளார்கள். சபாரத்தினம் வைத்தியருக்கு சொந்தமான அந்த மேல்மாடி வீட்டு மதில் ஏனைய பொதுவான மதில்களை விட உயரமாக கட்டப்பட்டுள்ளது.
அத்துடன் அதே வளவில் சபாரத்தினத்திற்கு சொந்தமான மற்றொரு வீடும் உள்ளது. இரு வீடுகளையும் பிரிப்பதற்கு உயரம் குறைந்த மதில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அந்த வீட்டில் உள்ளவர்கள் கூட யார்.. எந்த இடத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கூட அயலவர்களுக்கு தெரியாது. தர்மிகா வேலை செய்த வீட்டில் இருந்த குடும்பப் பெண் தாதியாக வேலை செய்வதாகவும் திருநெல்வேலியில் உள்ள நிறுவனத்தில் பகுதிநேர வேலை செய்வதாகவும் தெரியவருகின்றது. ஆனால் தாதியாக வேலை செய்யும் பெண்ணின் கணவர் என்ன செய்கின்றார்? என்பது தொடர்பாக யாருக்கும் எதுவும் தெரியாது. குறித்த தாதிப் பெண் வீட்டின் மேல்மாடியில் தனது இரு பிள்ளைகளுடனும் குடியிருந்துள்ளார்.
குறித்த பெண்ணின் பெற்றோரைப் பராமரிக்கவே தர்மிகா வேலைக்கு அமர்த்தப்பட்டதாக சில தகவல்கள் வெளிவந்துள்ளன. தர்மிகா உயிழந்த வீட்டுக்கு அருகில் அதே காணியில் உள்ள மற்றைய வீட்டில் உள்ளவர்கள் தொடர்பாகவும் பொலிசார் விசாரணை மேற்கொண்டால் பல தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். ஏனெனில் தர்மிகாவின் உயிரிழப்பு தொடர்பாக அவர்களையே கேளுங்கள். நாங்கள் கருத்துக் கூறமாட்டோம் என அயலவர்கள் கூறுகின்றார்கள்.
தர்மிகாவின் மரணச்சடங்கின் பின் தர்மிகா இறந்த வீட்டில் உள்ளவர்களிடம் என்ன நடந்தது என்பது தொடர்பாக விசாரிக்க முற்பட்ட போது அவர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அத்துடன் பொலிசாரிடம் முறையிட முயன்றார்கள்.
முழங்கால்கள் நிலத்தில் ஊன்றி மடிந்த நிலையில் துாக்கில் தொங்கியபடி தர்மிகாவின் சடலத்தைக் பார்த்தவர்கள் அதனை உடனடியாக ஒரு கொலை என்றே கருதுவார்கள். பெரும்பாலும் உயரம் குறைந்த, தமக்கு எட்டிய துாரத்தில் கயிற்றை போட்டு துாக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டவர்களின் கால்கள் நிலத்தில்பட்டவாறு இருப்பது பொலிசார் அறிந்த ஒன்று. அதற்கான விஞ்ஞான விளக்கம் சட்டவைத்திய அதிகாரியே கொடுக்கவேண்டும். ஆனாலும் தர்மிகா துாக்கில் தொங்கியவாறு காணப்பட்ட நிலையை வைத்து பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் தர்மிகா கொலை செய்யப்பட்டுள்ளார் என்றே கருதுவார்கள்..
சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை என்ன சொல்கின்றது?
தர்மிகா மன அழுத்தும் காரணமாக தற்கொலை செய்துள்ளார் என சட்டமருத்துவ அதிகாரி அறிக்கை விட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் பரவியுள்ளன. உயிரிழந்த சிறுமியின் மரண அறிக்கையில் குறித்த சிறுமி தற்கொலை செய்துள்ளார் என்றே உள்ளது. இருப்பினும் சட்டவைத்திய அதிகாரி, குறித்த சிறுமி மன அழுத்தம் காரணமாக உயிர்துறந்தார் என்று கூறுவதாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாமா? ஒருவர் இறந்த பின்னர் அவருக்கு மன அழுத்தம் உள்ளது என்று சட்டவைத்தியத்துறையில் கண்டு பிடிக்கும் அளவுக்கு உடல் அல்லது மூளையில் சான்றுகள் உள்ளனவா?
பொதுவாக துாக்கில் தொங்கி உயிரிழந்தவர்கள் மற்றும் கொலை எனச் சந்தேகிக்கப்படுபவர்களின் சடலங்களை புதைப்பதே வழமை. ஆனால் வழக்கத்துக்கு மாறாக தர்மிகாவின் உடலை எரிக்க உத்தரவிட்டதும் சமூகவலைத்தளங்களில் தர்மிகாவின் கொலை தொடர்பாக பாரிய சந்தேகங்களுடன் கூடிய கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் குறித்த சிறுமி உயிரிழந்த பின்னர் அந்தச் சிறுமியின் சம்பளப் பணம் மற்றும் ஏற்கனவே கொடுக்காது விட்ட சம்பள மீதிப் பணங்கள் போன்றவற்றை சட்டவைத்திய அதிகாரி குறித்த சிறுமியின் வீட்டு குடும்பப் பெண்ணான தாதியிடம் இருந்து சிறுமியின் தாய்க்கு பெற்றுக் கொடுத்துள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. அவ்வாறான செயற்பாடு உண்மையாக இருந்தால் சட்டவைத்திய துறையில் இவ்வாறான செயற்பாடுகளும் மேற்கொள்வதற்கு இடம் உள்ளனவா? இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்கள் விரிவான விளக்கங்களை ஒரு போதும் கொடுக்கமாட்டார்கள். ஏனெனில் சமூகவலைத்தளங்களில் கருத்து வெளியிடுபவர்கள் மற்றும் பொதுமக்கள் போன்றவர்களுக்கு நாங்கள் ஏன் பதில் சொல்ல வேண்டும். அவர்கள் சும்மா குமுறுவதற்கு எல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டுமா? என சம்மந்தப்பட்டவர்கள் கருதுவார்கள். ஏனெனில் சமூகவலைத்தளங்களில் குமுறுவதாலோ பொதுமக்கள் சந்தேகப்படுவதாலோ சம்மந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.
தர்மிகாவின் குடும்பப் பின்னணி என்ன?
தர்மிகாவின் தாய் இரண்டு திருமணங்கள் முடித்தவர். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தர்மிகா 17 வயதில் இறந்ததற்கான 75 வீதமான பொறுப்பை தர்மிகாவின் தாய், தர்மிகாவின் தந்தை மற்றும் தற்போதைய தாயின் கணவன், தர்மிகாவை வேலைக்கு விட உதவிய தர்மிகாவின் பெரியம்மா மற்றும் தர்மிகா சார்ந்த உறவுகளே ஏற்றுக் கொள்ள வேண்டும். 13 வயதாக இருக்கும் போதே ஒரு பிஞ்சுச் சிறுமியை வேலைக்கு விட்டு சாப்பிடும் அளவுக்கு தர்மிகாவின் உறவுகள் இருந்துள்ளார்கள் என்பது மிக மிகக் கேவலமான விடயமாகும். அவர்கள் அனைவரையும் சிறைக்குள் தள்ள வேண்டும். தர்மிகா இறந்த பின்னரும் அவளது வேலை செய்த சம்பளத்தை வாங்கிய தாய் எவ்வாறான ஒரு மனநிலை உள்ளவர் என்பது விளங்கும்.
தர்மிகாவை 13 வயதிலிருந்து வேலைக்கு அமர்த்தியவர்களில் இருந்து இப்போது தர்மிகா தற்கொலை செய்த வீட்டு குடும்பப் பெண்ணான தாதி உட்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தி விசாரணைக்குட்படுத்தல் வேண்டும். அவர்கள் குற்றம் இழைத்திருந்தால் அவர்களுக்கான தண்டனை கொடுக்கப்படல் வேண்டும். இல்லாவிட்டால் தர்மிகாவைப் போல தற்போதும் வேலைகளுக்கு அமர்த்தப்பட்டுள்ளவர்கள் பலர் இவ்வாறு இறந்து போக வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.