யாழ் மனிதஉரிமை அலுவலக மலசலகூடத்தில் பெண் அலுவலருக்கு நேர்ந்த அவலம்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்திற்குள் கடமையில் இருந்த பெண் உத்தியோகத்தர் ஒருவர் 119 பொலிஸ் அவசர இலக்கத்தை தொடர்பு கொண்டு முறையிட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

அலுவலகத்தின் மாடியிலுள்ள கழிவறைக்கு குறிப்பிட்ட பெண் சென்றதை தொடர்ந்து, வாகன சாரதியும் அங்கு சென்றதையடுத்தே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்துக்குள் சில மாதங்களாக நிலவும் உள்ளக விவகாரங்கள் முற்றி, இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக அறிய முடிகிறது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் ஆண், பெண் உத்தியோகத்தர்களுக்கு பொதுவான கழிப்பறையே உள்ளது. அந்த கழிப்பறைக்கும் தாளிடும் வசதி கிடையாது. இது குறித்து பெண் உத்தியோகத்தர்கள் நீண்டகாலமாக முறைப்பாடு செய்தும், அது யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை.

யாழ் பிராந்திய அலுவலகத்தின் பொறுப்பான பதவியில் உள்ள ஒருவர் தொடர்பில் உணர்திறன் கொண்ட குற்றச்சாட்டுக்கள் சில சுமத்தப்பட்டுள்ளது. அது தொடர்பில் சில மட்டங்களில் ஆராயப்பட்டு வருவதாக அறிய முடிகிறது. இந்த குற்றச்சாட்டுக்களை வெளிப்படுத்தும் ஆவணங்களை திரட்டியதாலேயே தாம் பழிவாங்கப்படுவதாக அந்த உத்தியோகத்தர்கள் குறிப்பிடுவதாக அறிய முடிகிறது.

சம்பவ தினத்தில் குறிப்பிட்ட பெண் உத்தியோகத்தர் ஒருவர் கழிப்பறையை பயன்படுத்திய போது, யாரோ வரும் சத்தம் கேட்டதாகவும், கழிப்பறையை தாளிடும் வசதியில்லாததால், அவசர கதியில் கதவை திறந்த போது, எதிரே வாகன சாரதி நின்றதாகவும், பிராந்திய அலுவலக பிரமுகர் ஒருவரால் அனுப்பப்பட்டே சாரதி அங்கு வந்ததாக முறைப்பாட்டாளர் தரப்பினர் குற்றம்சுமத்தினர்.

மேலே ஏதோ சத்தம் கேட்பதால் சென்று பார்த்து வருமாறு குறிப்பிட்ட பிரமுகர் தன்னை பணித்ததால் வந்ததாகவும், மேலே கழிப்பறையை பெண்ணொருவர் பயன்படுத்துவதை தான் அறியவில்லையென்றும் சாரதி குறிப்பிட்டார்.

அலுவலக மலசலகூட வசதியை மேம்படுத்துவதாக சம்பந்தப்பட்ட தரப்பினர் உத்தரவாதமளித்ததாலும், இந்த சம்பவம் தொடர்பில் துறைரீதியான உள்ளக விசாரணை நடத்துவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்ததாலும், பொலிசார் இரு தரப்பையும் இணக்கப்பாட்டுடன் அனுப்பி வைத்தனர்.

இதேவேளை, வெளிநாட்டு குடியுரிமை பெறுபவர்களிற்காக ஆவணங்களில் மாற்றம் செய்யப்பட்டு, மோசடி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதாக எழுப்பப்பட்டுள்ள உணர்திறன் மிக்க குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆவணங்களை, அரச உயர்மட்டங்கள் சில பெற்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறிய முடிகிறது.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad