பிரான்சிலிருந்து கலியாணக் கனவுகளுடன் கிளிநொச்சி சென்ற 36 வயதான இளைஞன் ஒருவர் பெரும் விரக்தியில் மீண்டும் பிரான்ஸ் திரும்பியுள்ளார். அத்துடன் தான் ஏமாற்றப்பட்டது தொடர்பாக பொலிசாரிடமும் முறைப்பாட்டைப் பதிவு செய்துவிட்டு பிரான்ஸ் வந்துள்ளதாகத் தெரியவருகின்றது. கடந்த பெப்ரவரி மாத தொடக்கப் பகுதியில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு முல்லைத்தீவைச் சொந்த இடமாகக் கொண்ட பிரான்சில் வசிக்கும் 36 வயதான இளைஞன் கிளிநொச்சி சென்றுள்ளார் .
இளைஞனின் பெற்றோர் யுத்ததில் இறந்துவிட்டார்கள். தனது மூத்த சகோதரிகளுடன் வாழ்ந்து வந்த இளைஞன் 2010ம் ஆண்டளவில் பிரான்ஸ் சென்றுள்ளார். குறித்த இளைஞனுக்கு மூத்த சகோதரி பெண் பார்க்கும் படலத்த தொடங்கியுள்ளார். இந் நிலையில் தனது கணவனின் துாரத்து உறவுக்கார குடும்பம் ஒன்றில் 24 வயதான யுவுதி ஒருவரை இளைஞனின் அக்கா பெண் பார்த்து திருமண நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்துள்ளது.
கடந்த வருட நடுப்பகுதியிலிருந்து பிரான்ஸ் இளைஞன் குறித்த யுவதியுடன் தொடர்ச்சியாக கதைத்து வந்துள்ளார்.அத்துடன் பணம் மற்றும் பரிசுப் பொருட்களும் தொடர்ச்சியாக தனது வருங்கால மனைவிக்கு குறித்த இளைஞன் அனுப்பி வந்துள்ளான். இவ்வாறான நிலையில் கடந்த பெப்ரவரி மாத நடுப்பகுதியில் திருமணம் நடக்க ஆயுத்தமாகியுள்ளது. பிரான்சிலிருந்து இளைஞன் தை மாத நடுப்பகுதியிலேயே இலங்கை சென்றுள்ளார். அவர் இலங்கை சென்று ஓரிரு நாட்களில் யுவதி வீட்டிலிருந்து காணாமல் போய்விட்டார். இதனால் கடும் பரபரப்பு ஏற்பட்டது. இந் நிலையில் குறித்த யுவதி, தான் ஒருவரைக் காதலித்து வந்ததாகவும் அவருடனேயே தற்போது தங்கியுள்ளதாகவும் தன்னைத் தேட வேண்டாம் எனவும் தனது பெற்றோருக்கு தொலைபேசியில் கூறியுள்ளார்.
இச் சம்பவம் பிரான்சிலிருந்து வந்த இளைஞனுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இருந்தும் குறித்த யுவதியை நேரில் சந்திப்பதற்காக கடும் முயற்சி செய்துள்ளார் பிரான்ஸ் இளைஞன். தனது வருங்கால மனைவியை கவர்ந்து சென்ற மன்மதன் யார் என அறிவதற்கு கடும் பிரயத்தனம் எடுத்துள்ளார் குறித்த இளைஞன். இருந்தும் யுவதி இருக்கும் இடத்தை அவரால் அறிய முடியவில்லை. இந் நிலையில் பொலிசாரிடம் முறையிட்டு தான் யுவதியால் ஏமாற்றப்பட்டதாக கூறி தன்னால் கொடுக்கப்பட்ட பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் தொடர்பான விபரங்களையும் பொலிசாருக்கு தெரிவித்திருந்தார்.இதனையடுத்து பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையில் யுவதியும் அவளது காதலனும் பொலிஸ் நிலையம் வந்துள்ளார்கள். பிரான்ஸ் இளைஞன் கொடுத்த பணம் மற்றும் பரிசுப் பொருட்களை திருப்ப அவரிடம் கொடுப்பதாக யுவதியால் பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்கப்பட்டதுடன் பிரான்ஸ் இளைஞன் அனுப்பிய கைத் தொலைபேசி மற்றும் சில பொருட்களும் சிறுதொகைப் பணமும் யுவதியால் பிரான்ஸ் இளைஞனுக்கு பொலிஸ் நிலையத்தில் வைத்தே திரும்ப கொடுக்கப்பட்டது.
ஆனாலும் தான் 18 லட்சம் ரூபா பணம் அனுப்பியதாக கூறி அதற்கான ஆதாரத்தையும் பிரான்ஸ் இளைஞன் பொலிஸ் நிலையத்தில் கொடுத்திருந்தார். அவ்வளவு பணத்தையும் திரும்ப கொடுப்பதாக யுவதி கூறியதையடுத்து பிரான்ஸ் இளைஞனால் எதுவும் செய்ய முடியாது பொலிஸ் நிலையத்திலிருந்து திரும்பியுள்ளார். இதே வேளை குறித்த யுவதியின் மனதை கொள்ளை கொண்ட அந்த காதலன் ஏற்கனவே திருமணம் முடித்து 3 பிள்ளைகளின் தந்தை என்பதுடன் யாழ்ப்பாணம் – கொழும்பு சேவையில் ஈடுபடும் பேரூந்து ஒன்றின் நடத்துனர் எனவும் பிரான்ஸ் இளைஞன் துப்பறிந்து கண்டு பிடித்துள்ளார்.