யாழ் பிரபல அரிசி ஆலை வர்த்தகரின் தலையில் மிளகாய் அரைத்த தென்னிலங்கையர்;

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல அரிசி ஆலை ஒன்றில் , 50 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அரிசி மூடைகளை கொள்வனவு செய்து விட்டு , பணத்தினை வழங்காது மோசடி செய்த குற்றச்சாட்டில் காலி வர்த்தகர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழில் உள்ள பிரபல அரிசி ஆலை ஒன்றில் 25 கிலோ எடையுள்ள ஆயிரத்து 200 அரிசி மூடைகளை காலியில் உள்ள மொத்த விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவர் கொள்வனவு செய்துள்ளார்.

விற்பனையாளருக்கும் , கொள்வனவாளருக்கும் இடையில் இடைத்தரகராக ஒருவர் செயற்பட்டுள்ளார். அரிசி மூடைகளை யாழில் இருந்து , காலி பகுதியில் உள்ள மொத்த விற்பனை நிலையத்திற்கு லொறியில் எடுத்துச் சென்று கொடுத்த யாழை சேர்ந்தவர்கள், அரிசி மூடைக்கான பணத்தினை தருமாறு கோரிய போது , பணத்தினை தாம் இடை தராகரிடம் வழங்கி விட்டதாக கூறியுள்ளனர்.

எனினும் பணம் விற்பனையாளரிடம் வந்து சேராமையால் , அவர் அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

அவரின் முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் காலியில் அரிசியை கொள்வனவு செய்தவரிடம் விசாரணைகயில், தான் யாழ்ப்பாணத்தில் யாரிடமும் அரிசியை கொள்வனவு செய்யவில்லை என பதில் அளித்துள்ளார்.

எனினும் பொலிஸார் களஞ்சிய அறையை சோதனைக்கு உட்படுத்திய போது, யாழ்ப்பாண அரிசி ஆலையின் பெயர் பொறிக்கப்பட்ட அரிசி மூடைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன.

அரிசி மூடைகளை மீட்ட பொலிஸார் அவற்றை யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வந்ததுடன் , உரிமையாளரையும் கைது செய்து யாழ்ப்பாணம் அழைத்து வந்து யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

நீதிமன்ற விசாரணைகளை அடுத்து அரிசியை கொள்வனவு செய்தவரை பிணையில் செல்ல அனுமதித்த மன்று , மீட்கப்பட்ட அரிசி மூடைகளை விற்பனை செய்த நபரிடம் மீள கையளிக்க உத்தரவிட்டது. 



Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad