தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அடுத்துள்ள எப்போதும் வென்றான் கீழத்தெருவை சேர்ந்தவர் வைரமுத்து. இவரது மனைவி சின்னமணி(35). இவர் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் வைரமுத்து உயிரிழந்துவிட்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கணவர் உயிரிழந்த பின்னர் தனது பிள்ளைகளுடன் தூத்துக்குடி அருகே உள்ள புதுப்பேட்டை பகுதியில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், தற்போது வசித்திருக்கும் பகுதிக்கு ரேஷன் அட்டையை மாற்றாததால், தனது சொந்த ஊருக்கு மகளுடன் பேருந்தில் வந்து ரேஷன் பொருட்களை வாங்கியுள்ளார். மீண்டும் தான் வசிக்கும் புதுப்பேட்டை பகுதிக்கு செல்ல மகளுடன் பேருந்து நிலையத்தில் சின்னமணி காத்திருந்தார்.
அப்போது அங்கு வந்த வைரமுத்துவின் தம்பியான ராஜேஷ் கண்ணன் (20) சின்னமணியிடம் தகராறில் ஈடுபட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து ஆத்திரமடைந்த ராஜேஷ் கண்ணன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அண்ணி என்று கூட பாராமல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தார். மகள் கண்முன்னே தாய் கொலை செய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்து அழுது கதறினார்.
பின்னர் நடந்த சம்பவத்தை கூறி எப்போதும் வென்றான் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சின்னமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், கணவர் இறந்தவுடன் அவரது தம்பியான ராஜேஷ் கண்ணனுடன் தொடர்பில் இருந்த சின்னமணிக்கு, வேறு சில ஆண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை ராஜேஷ் கண்ணன் கண்டித்தும் அவர் கண்டுகொள்ளாததால், ஆத்திரத்தில் அவரை வெட்டிக்கொன்றதும் தெரியவந்துள்ளது.