ஹோமாகம, ஹிரிபிட்டிய, போகஹவில வீதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடியில் இருந்து குதித்த 21 வயதுடைய பெண், சுவரில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு கம்பியால் வயிற்றில் பலத்த காயமடைந்த நிலையில் நேற்று முன்தினம் (19) இரவு உயிரிழந்துள்ளார்.
இந்த யுவதியும் மேலும் இருவரும் போதைப்பொருள் உட்கொள்வதாக இந்த வீட்டில் யுவதியுடன் தங்கியிருந்த ஒருவரான கள்ளக்காதலனின் மனைவி செய்த முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸ் குழுவொன்று சோதனையிட சென்ற போது, இந்த விபரீதம் நிகழ்ந்தது.
வீட்டின் முன்பக்கமாக வந்த யுவதி, பொலிசாரை பார்த்ததும், பொலிசார் மாடிக்கு வருவதற்குள், மாடியில் இருந்து தப்பி ஓட முயன்றது விசாரணையில் தெரியவந்தது.
இந்த வீட்டின் சுவரில் திருடர்களிடமிருந்து பாதுகாக்க இரும்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. யுவதி மாடியிலிருந்து கீழே குதித்த போது, இரும்பு கம்பி வயிற்றில் குத்தியது.
யுவதி கம்பியில் தொங்கிய நிலையில் இருந்ததையடுத்து உடனடியாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 1990 அம்புலன்ஸ் வண்டியை வரவழைத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த திமானி ஹிமான்சா என்ற 21 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண் சம்பவம் நடந்த வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்தார்.
வீட்டின் உரிமையாளருக்கு சொந்தமான வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிந்து வந்த இவர், சில காலமாக அவருடன் கள்ளக்காதல் உறவில் இருந்துள்ளார். வர்த்தகர் ஐஸ் போதைப்பொருளை உட்கொள்ளும் நபர் என்பதாலேயே யுவதியும் ஐஸ் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தமை முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களின் கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்த வர்த்தகரின் மனைவி, தொடர்ந்து தகராறு செய்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
சம்பவம் நடந்த விடுதியில், மற்றொரு நபருடனும், இந்த பெண்ணுடனும் இணைந்து தனது கணவன் போதைப்பொருள் உட்கொள்வதாக கிடைத்த தகவலின்படி, பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். பொலிசார் அங்கு சென்றபோது, விபத்து நடந்துள்ளது தெரியவந்தது.
இதன்படி, சம்பவத்தின் போது அங்கிருந்த முறைப்பாட்டாளரின் கணவர் மற்றும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டு ஹோமாகம சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.